ஜப்பான் செல்லவுள்ள ரணில்! நண்பனின் இறுதிக்கிரியையில் பங்கேற்பு
ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ரணில் விக்ரமசிங்க அங்கு நடைபெறவுள்ள ஷின்சோ அபேவின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ளவுள்ளார் என தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் அதிபரான ரணில் விக்ரமசிங்க இந்த மாத இறுதியில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இதன் போது ஜப்பானிய பிரதமரான புஃமியோ கிஷீடாவிடம் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஜப்பானிடம் இருந்து உதவிகளை பெறுவது, ஜப்பானிய முதலீட்டுத்திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.
இந்நிலையில், ஜப்பான் செல்லும் ரணில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் சம்பிரதாயபூர்வமான இறுதிக்கிரியை நிகழ்வில் கலந்துக்கொள்ளவுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
ரணிலின் நீண்ட கால நட்பு
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவும் ரணில் விக்ரமசிங்கவும் நீண்டகால அரசியல் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த சந்தர்ப்பங்களில் ஜப்பான் பிரதமர் என்ற வகையில் ஷின்சோ அபே இலங்கையின் முன்னேற்றத்திற்காக பல ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளார்.
ஷின்சோ அபேவின் இறுதிக்கிரியைகள்
ஷின்சோ அபே கடந்த ஜூலை மாதம் 8 ஆம் திகதி அரசியல் கூட்டம் ஒன்றில் உரையாற்றிக்கொண்டிருக்கும் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
மேலும், ஷின்சோ அபேவின் தகனம் செய்யப்பட்ட உடலின் அஸ்தி தொடர்பான இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 27 ஆம் திகதி ஜப்பானில் நடைபெறவுள்ளது.