ஆயுர்வேதத்தை மருத்துவ விஞ்ஞானமாக்குவதே எனது நோக்கம்: ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
ஆயுர்வேதத்தை மருத்துவ விஞ்ஞானமாக அங்கீகரிப்பதே தனது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
அதற்காகவே ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபையொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் இன்று வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற உள்நாட்டு வைத்தியர்களின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை கூறியுள்ளார்.
சுற்றுலாப் பயணிகள்
இந்த மாநாட்டில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, “இதற்காக பாரம்பரிய வைத்தியர்களையும் ஒன்றிணைக்க வேண்டும். அவர்களுக்கும் அங்கீகாரம் வழங்க வேண்டும். அதே சமயம் ஜோதிடத்தையும் இதனுடன் இணைக்க வேண்டும்.
இவை அனைத்தும் பின்னிப் பிணைந்தவை. இவற்றை பிரிக்க முடியாது. அதற்கு அமைவாக புதிய கட்டமைப்பைத் உருவாக்க வேண்டும். இந்தத் துறைகள் அனைத்தையும் அங்கீகரித்து அவற்றைப் பதிவு செய்ய புதிய சடடமொன்றை கொண்டு வர எதிர்பார்க்கிறோம்.
இந்தத் துறையின் முன்னேற்றத்திற்காக நீண்ட காலத் திட்டங்களையும் ஐந்தாண்டுத் திட்டத்தையும் வகுக்க எதிர்பார்க்கிறோம். ஆயுர்வேத மருத்துவத்திற்கு, மருத்துவ அறிவியலாக அங்கீகரிப்பை பெற்றுக்கொடுப்பதே எனது நோக்கம். அதன்படி, இந்த மருத்துவ முறைகளைத் தேடி சுற்றுலாப் பயணிகள் நம் நாட்டிற்கு வருகிறார்கள்.
ஆயுர்வேத சிகிச்சை
தாய்லாந்து (Thailand) போன்ற நாடுகளில் உள்ள ஒரு பாரிய ஹோட்டலுக்குச் செல்லும்போது, அங்கு ஆயுர்வேத சிகிச்சையைப் பெறலாம். இதே திட்டத்தை நாமும் எதிர்காலத்தில் செயல்படுத்த வேண்டும்.
எனவே, சுற்றுலாத் துறையில் ஆயுர்வேத மருத்துவம் சேர்க்கப்பட வேண்டும். இது அதிக அந்நியச் செலாவணியை ஈட்ட நமக்கு உதவுகிறது. இன்று சென்னை (Chennai) போன்ற நாடுகளில் ஜோதிட முறையும் உருவாகியுள்ளது.
இந்த மரபுகள் அனைத்தையும் இணைத்து இந்தத் துறையை நாம் முன்னேற்ற வேண்டும். எனவே ஆயுர்வேத தேசிய சபையை எவ்வாறு நிறுவுவது என்பது குறித்து எங்களுக்கு ஆலோசனை தேவை.
அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் வகையில் இந்த சபையை நிறுவுவது அவசியமாகும்" என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |