அதிபர் ரணிலின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி
உலகில் வாழும் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தனது ரமழான் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது
இஸ்லாமிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதமாகக் கருதப்படும் புனித ரமழான் மாதமானது, முஸ்லிம் சகோதரர்களுக்கு சிந்தனை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான மாதமாகக் கருதப்படுகிறது.
ரமழான் பண்டிகையை கொண்டாடும் வாய்ப்பு
இந்த ரமழான் மாதம், நல்வாழ்வு மற்றும் நல்வாழ்வின் கலங்கரை விளக்கமாக இருப்பதோடு நம்மிடையே ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை வளர்க்கிறது.
சாதி, மத பேதமின்றி இலங்கையர்கள் என்ற வகையில் நாம் அனைவரும் எதிர்கொண்ட இக்கட்டான காலகட்டத்தை கடந்து நாட்டில் நல்லதொரு சூழல் உருவாகியுள்ள இவ்வேளையில் எமது சக முஸ்லிம்களுக்கு ரமழான் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வாய்ப்பு இந்த வருடம் கிடைத்துள்ளதையிட்டு நான் ஆனந்தமடைகின்றேன்.
இந்நாட்டில் ரமழான் நோன்பு காலத்தை முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி, அனைவரும் தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் காலமாக கருதுவதே சரியானதென நான் நினைக்கிறேன்.
பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு
தனிமனித முன்னேற்றத்தைப் பொருட்படுத்தாமல், கூட்டுச் சமூக விழுமியங்களை உயர்த்துவதற்காக உருவாக்கப்படும் இவ்வாறான விடயங்கள், வீழ்ச்சியடைந்த இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும், நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்வதற்குமான கூட்டு முயற்சிக்கான அடிப்படையை வழங்கும் என்றும் நான் நம்புகிறேன்.
அர்ப்பணிப்பு, சுயக்கட்டுப்பாடு, சகிப்புத்தன்மை உள்ளிட்ட ரமழானில் முன்னிலைப்படுத்தப்படும் விழுமியங்கள், அதை நோக்கிய பயணத்தில் சரியான வழிகாட்டியாக அமையும் என்ற எதிர்பார்ப்புடன், இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கும், முழு உலக முஸ்லிம் சமூகத்திற்கும் சமாதானம், நல்லிணக்கம் நிறைந்த இனிய ரமழான் பெருநாளாக அமைய இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |