சிறிலங்கா அரச தலைவர் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பேசப்போவது என்ன?
நாட்டில் மனித உரிமைகள் தொடர்பில் அரசு மேற்கொண்டுள்ள முன்னேற்றகரமான நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மாநாட்டு அமர்வில் உரையாற்றவுள்ளார் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.
அதேவேளை, அது தொடர்பில் முன்வைக்கப்படும் தவறான கருத்துக்களைச் சரி செய்வது தொடர்பிலும் அவர் கவனம் செலுத்துவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையம் ஏற்பாடு செய்திருந்த வாராந்த செய்தியாளர் மாநாடு சூம் தொழில்நுட்பம் ஊடாக நடைபெற்றது.
அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துக்களைத் தெரிவிக்கும்போதே ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க மேற்படி விடயங்களைத் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
கோவிட் வைரஸ் சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவது, பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியான வீழ்ச்சியை சரி செய்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதியின் உரையின்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
மாநாட்டில் கலந்துகொள்ளும் அரச தலைவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகத்தை தனித்தனியே சந்திப்பதற்கு சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவருடன் முக்கிய பல விடயங்களை உள்ளடக்கிய பேச்சை முன்னெடுப்பார்.
அத்துடன் மாநாட்டில் கலந்துகொள்ளும் இலங்கைக்கு ஆதரவான பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களை சந்திக்கும் ஜனாதிபதி, அந்த தலைவர்களுடன் முக்கியமான பேச்சுகளை முன்னெடுப்பார் என்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் தெரிவித்தார்.