ஜனாதிபதி தேர்தல் களம் - யாழ். மாவட்ட தேர்தல் கள நிலவரம்
புதிய இணைப்பு
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) மாலை நிறைவடைந்துள்ளது.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 66.98 வீதமான வாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
சற்று முன்னர் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தின் 10 தேர்தல் தொகுதிகளிலும் உள்ள 511 வாக்களிப்பு நிலையங்களில் இருந்தும் வாக்குபெட்டிகள் அரச ஊழியர்களின் பங்களிப்பில் காவல்துறையினரின் பாதுகாப்புடன் இன்று பிற்பகல் யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாண (jaffna) மாவட்டத்தில் இலங்கையின் 9 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.
இன்று (21.9.2024) காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமான நிலையில் வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் நின்று ஜனநாயக கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி
தேர்தல் தினத்தில் வன்முறைகள் மற்றும் சட்டமீறல்களை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் 492,280 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், 511 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் காலை 10 மணி வரையிலான நிலவரப்படி 22.53 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றதாக யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |