மொட்டு கட்சியின் அதிபர் வேட்பாளர் : மகிந்தவின் அதிரடி அறிவிப்பு
இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர் ஒருவர் நிச்சயம் களமிறங்குவார் என அந்த கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எனினும், குறித்த வேட்பாளர் யார் என்பது தொடர்பான தீர்மானம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் எனது மகனும் கட்சியின் தேசிய அமைப்பாளரருமான நாமல் ராஜபக்ச களமிறங்க மாட்டார் என நான் நம்புகிறேன்.
அதிபர் வேட்பாளர்
அத்துடன், கட்சி சார்பான வேட்பாளர் ஒருவரை அதிபர் தேர்தலில் களமிறக்க வேண்டாமென இதுவரை எந்தவொரு தரப்பினராலும் கோரப்படவில்லை.
மேலும், கட்சியிலிருந்து விலகுவது மற்றும் தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு சுதந்திரம் உண்டு.
இவ்வாறான நடவடிக்கைகளுக்கு கட்சி ஒருபோதும் தடையாக இருக்காது.
சுதந்திர கட்சியின் பிளவு
இதேவேளை, சிறிலங்கா சுதந்திர கட்சியின் பிளவு தொடர்பில் நான் கருத்து வெளியிட விரும்பில்லை.
எனினும், கட்சி தற்போது பாரிய அரசியல் நெருக்கடியை எதிர்நோக்குகிறது. இதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.
கட்சியின் முன்னாள் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் களமிறங்கியுள்ளார். அவர் கட்சியை மீள கட்டியெழுப்ப முயற்சிக்கிறார்.” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |