அதிபர் தேர்தலை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு
இலங்கையில் அதிபர் தேர்தலை நடத்தும் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை வாக்காளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் மாதம் முதல் கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய தேர்தல்கள் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
நிறைவடையும் அதிபரின் பதவிக் காலம்
“நாட்டு மக்களின் உரிமை வாக்குரிமை ஊடாக உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தல் தீர்மானம்மிக்கது.
அரசியலமைப்பின் பிரகாரம் இந்த ஆண்டு அதிபர் தேர்தல் இடம்பெறும். அதிபரின் ஐந்தாண்டு பதவிக்காலம் எதிர்வரும் நவம்பர் மாதத்துடன் நிறைவடையவுள்ளது.
1981ஆம் ஆண்டு 15ஆம் இலக்க அதிபர் தெரிவு சட்டத்துக்கு அமைய அதிபரின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு ஒரு மாதம் அல்லது இரு மாதத்துக்கு முன்னர் அதிபர் தேர்தலை நடத்த வேண்டும்.
இதற்கமைவாக எதிர்வரும் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதமளவில் அதிபர் தேர்தல் நடத்தப்படும். அதிபர் தேர்தலை நடத்தும் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதிபர் தேர்தல்
வாக்காளர் பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் மாதம் முதல் கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக முன்னெடுக்கப்படும். வாக்காளர் பெயர் பதிவு நடவடிக்கைகளுக்கு நாட்டு மக்கள் சரியான தகவல்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
வாக்காளர் பெயர் பதிவு நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதமளவில் நிறைவடையும் அதனை தொடர்ந்து வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டு நான்கு வாரகாலத்துக்குள் அதிபர் தேர்தல் நடத்தப்படும்.
2023ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தது. நிதி விடுவிப்பு தாமதமானதால் தேர்தல் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது, நீதிமன்றம் எடுக்கும் தீர்மானத்துக்கு உட்பட்டு செயற்படுவோம்.
நாடாளுமன்றத்தை கலைத்தல்
ஒன்பதாவது பதவிக் காலம் 2025 ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடையும், நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அதிபருக்கு உண்டு, நாடாளுமன்றத்தை கலைத்து, தேர்தலை நடத்தும் திகதியை அதிபர் தீர்மானித்தால் அதற்கமைய ஆணைக்குழு நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.
தேர்தல் முறைமையில் ஏற்பட்டுள்ள சட்ட சிக்கலினால் மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. ஆகவே தேர்தல் முறைமை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு நாடாளுமன்றத்தின் ஊடாக தீர்வு காண வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தியுள்ளோம்.
இந்த ஆண்டு எந்த தேர்தலும் நடத்தப்படலாம். அதிபர் தேர்தலை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உண்டு, பொதுத்தேர்தலை அதிபர் தீர்மானிக்கலாம், உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நீதிமன்றம் தீர்மானிக்கலாம், மாகாண சபைத் தேர்தலை நாடாளுமன்றம் தீர்மானிக்கலாம். ஆகவே இந்த ஆண்டு தீர்மானமிக்கது“ எனத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
Sri Lanka Parliament Election 2024 Live Updates
