சீனா வசமாகும் சிறிலங்காவின் அரச தலைவர் மாளிகை! தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட தகவல்
நாட்டில் விலைவாசியானது விண்ணைத் தொடுமளவிற்கு சென்றுவிட்டது. முன்னைய ஆட்சியிலும் விலைவாசி உயர்வடைந்தது தான் ஆனால் இந்தளவிற்கு விலை உயர்வடையவில்லை.
பிரித்தானியர்களின் ஆட்சிக்காலத்தில் ஆளுநர் மாளிகையாக இருந்த அரச தலைவர் மாளிகையை சீனாவிற்கு கொடுத்துவிட்டு ஆளுநரையும் நியமித்துவிட்டு சீனாவின் காலனித்துவ நாடாக அறிவித்துவிடுங்கள்.
இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.
கொழும்பு - எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
சாதாரண மக்கள் பயன்படுத்தும் தேநீர், சோறு, பாண், மற்றும் கொத்துரொட்டி போன்றவற்றின் விலைகள் கடுமையாக உயர்வடைந்துள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் மக்களுக்கு நியாயம் - நீதியை - சரியான ஒரு தீர்வை தரும் என்ற நம்பிக்கை இல்லை. என்ன வரப்போகின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.
கொரோனாவைக் காரணம் காடடும் அரசாங்கம். கொரோனாவின் தாக்கம் இலங்கையில் மட்டுமா உள்ளது. உலகநாடு முழுவதும் தானே தாக்கம் உள்ளது. இந்தியாவிலும் உள்ளது பங்களாதேஷிலும் இருக்கின்றது. அவர்கள் பொருளாதாரத்தை சீராக பேணுகின்றனர்.
விலைவாசி கட்டுப்பாட்டில் உள்ளது, சம்பள உயர்வு இருக்கின்றது பொருளாதாரம் உடைந்து விழவில்லை. அதனால்தான் பங்களாதேஷில் இருந்து கடன் வாங்கியுள்ளோம்.
இந்தியா, பங்களாதேஷில் இல்லாத ஒரு நன்மை எங்கள் நாட்டில் இருந்துள்ளது. இலங்கை ஒரு தீவு. வெளிநாடுகளில் இருந்துதான் கொரோனா வந்திருக்க முடியும். நாங்கள் நாட்டை மூடுங்கள் என்று சொன்னப்போ அவர்கள் மூடவில்லை அதனால் தான் நாட்டில் கொரோனா பரவியது.
உங்களால் நாட்டை ஆள முடியாவிட்டால் - பாராமரிக்க முடியாவிட்டால் - விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் - மக்களின் வருமானததை உயர்த்த முடியாவிட்டால் - போய்விடுங்கள்.
நாங்கள் யார் - யார் தகுதியானவர்கள் - யார் ஆளப் போகின்றார்கள் என நாங்கள் தீர்மானிக்கின்றோம்.
மிதக்கும் வாக்குவங்கியை (Floating ballot) பயன்படுத்தி தான் அரச தலைவரான கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaka). இப்போது அதனை உடைத்துவிட்டார்.
திக்குத் தெரியாமல் - திசை தெரியாமல் - தலைவர்கள் இல்லாமல் - வழிகாட்டல்கள் இல்லாமல் - அரசாங்கம் இல்லாமல் நாடு மிதந்து போகின்றது. அந்த நிலைமைக்கு நாட்டைக் கொண்டுவந்துவிட்டார்கள்.
சீனாவின் ஆதிக்கம் எல்லைமீறிப் போகின்றது. கொழும்புத் துறைமுக நகரம் அமைக்கப்பட்டது மாத்திமல்லாமல் அதனைச் சுற்றி இருக்கக் கூடிய 13 ஏக்கர் காணிகள் சீனாவிற்கு வழங்கப்படப் போவதாக சொல்லப்படுகின்றது.
அதற்குள்ளேதான் அரச தலைவர் மாளிகையும் வருகின்றது. அது பிரித்தனியர்களின் ஆட்சிக்காலத்தில் ஆளுநர் மாளிகையாக இருந்து.
அதனையும் சீனாவிற்கு கொடுத்துவிட்டு ஆளுநரையும் நியமித்துவிட்டு சீனாவின் காலனித்துவ நாடாக அறிவித்துவிடுங்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.