அதிபர் பாதுகாப்பு பிரிவு கலைப்பு : அநுரகுமார அதிரடி அறிவிப்பு
எதிர்வரும் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படப்போகும் தேசிய மக்கள் படை தலைமையிலான அரசாங்கம், அரசியல்வாதிகளின் பொதுப் பணத்தை துஷ்பிரயோகம் செய்வதை நிறுத்தும் என அக்கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அதிபருக்குரிய பாரிய பாதுகாப்பு களையப்பட்டு பயன்படுத்தப்படும் விலை உயர்ந்த வாகனங்கள் கைவிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை மாவட்ட தேசிய மக்கள் சக்தி பெண்கள் சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதிபரின் பாதுகாப்பு பிரிவு கலைப்பு
அதிபரின் பாதுகாப்பிற்காக ஆயிரக்கணக்கான இராணுவ மற்றும் காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும், சில கிராமிய காவல் நிலையங்களில் பத்து காவல்துறை உத்தியோகத்தர்கள் மாத்திரமே இருப்பதாக அவர் கூறினார்.
எமது ஆட்சி வந்ததும் அதிபரின் பாதுகாப்பு பிரிவு கலைக்கப்பட்டு கிராமிய காவல் நிலையங்களுக்கு அவர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாகனங்களின் பாவனை கைவிடப்படும்
அதிபர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் பயன்படுத்தும் வாகனங்களின் எரிபொருள் திறன் ஒரு லீற்றருக்கு இரண்டு முதல் மூன்று கிலோமீற்றர்கள் எனத் தெரிவித்த அவர், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் அவ்வாறான வாகனங்களின் பாவனை கைவிடப்படும் எனவும் தெரிவித்தார்.
தேசிய மக்கள் படையினால் ஆட்சி அமைப்பது போராட்டத்தின் முடிவல்ல நாட்டைக் கட்டியெழுப்பும் போராட்டத்தின் ஆரம்பம் என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |