சிறிலங்கா அரச தரப்பில் குழப்பங்களுக்குரிய அறிகுறி?
சிறிலங்காவின் மிக பயங்கரமான சட்டமாக கருதப்படும், பயங்கரவாதத் தடைச் சட்ட, திருத்த சட்டமூலம் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸினால் சமர்ப்பிக்கப்பட்டது.
துறைக்குப் பொறுப்பான அமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்றபோதிலும், வெளிவிவகார அமைச்சர் குறித்த சட்டமூலத்தை முன்வைத்த விடயம் பல்வேறு குழப்பங்களுக்குரிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
நாடாளுமன்றம் நேற்றுக் கூடியபோது, நாளாந்த கடமைகளின் பின்னர் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் சட்டமூலத்தை மன்றில் முன்வைத்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்ட, திருத்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் கருத்து வெளியிட்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பயங்கரவாத தடைச் சட்டத் திருத்தத்தில் சர்வதேச நியமங்களுக்கு அமைய திருத்தங்களை மேற்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதா? எனக் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படும் என நீதியமைச்சர் தெரிவித்திருந்ததாகவும், அவ்வாறான நிலையில் இந்த திருத்த சட்ட மூலத்தை சபையில் ஏன் சமர்ப்பிக்கின்றீர்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர், இந்தச் சட்டமூலம் விவாதிக்கப்படும்போது இந்த விமர்சனங்கள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படலாம் எனக் குறிப்பிட்டார்.
குறித்த திருத்தம் நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாகவே முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் எந்த குடிமகனும் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் எனவும் வெளிவிவகார அமைச்சர் கூறினார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும் எனவும், அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதம் நடைபெறும், அதுவே ஆதரவாகவும் எதிராகவும் எந்தக் கருத்தையும் வெளிப்படுத்த சரியான சந்தர்ப்பம் எனவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் குறிப்பிட்டார்.