பயங்கரவாத தடைச்சட்டம் -கோட்டாபய உருவாக்கிய ஆலோசனை சபை
இலங்கையில் மிக பயங்கரமான சட்டமாக கருதப்படும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் குறித்த பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்களை முன்வைக்க ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் ஆலோசனை சபை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆலோசனை சபையின் தலைவராக முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்காவின் 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 13 ஆவது பிரிவுக்கு ஏற்ப, பயங்கரவாத தடுப்பு சட்டம் குறித்த ஆலோசனை சபை நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதியின் சட்டத்துறைப் பணிப்பாளர் நாயகம் உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹனதீர தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. ஏ. ஆர்.ஹெய்யந்துடுவ மற்றும் ஓய்வுபெற்ற சொலிசிட்டர் ஜெனரல் சுஹத கம்லத் ஆகியோர் இந்த ஆலோசனை சபையின் ஏனைய உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத நடவடிக்கைகள் சம்பந்தமாக சிறைத்தண்டனையை அனுபவிக்கும் மற்றும் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் குறித்து ஆராய்வதே இந்த சபையின் முக்கிய கடமையென ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிறைத்ததண்டனை மற்றும் தடுப்புக்காவலில் உள்ளவர்களை கண்டறிதல், விடுதலை செய்தல், பிணை வழங்குதல் உள்ளிட்ட எதிர்காலத் தீர்மானங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதும் இச்சபையின் முக்கிய கடமைகளில் ஒன்றாக அமைந்துள்ளது.
நீண்ட காலமாக ஆலோசனை சபை ஒன்று நியமிக்கப்படாத காரணத்தால், இதுவரையில் சிறையில் உள்ளவர்களுக்கு தங்கள் உரிமைகள் தொடர்பிலான விடயங்களை முன்வைக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என ஜனாதிபதியின் சட்டத்துறைப் பணிப்பாளர் நாயகம் உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹனதீர தெரிவித்துள்ளார்.
இந்த ஆலோசனை சபை நியமிக்கப்பட்டதன் மூலம், கைதிகள் தங்கள் பிரச்சினைகளை முன்வைக்க சந்தர்ப்பம் கிடைக்குமெனவும் ஹரிகுப்த ரோஹனதீர தெரிவித்துள்ளதாக, ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.