இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானம்: விளக்கம் வழங்கிய அரசாங்கம்
உள்நாட்டு போர் முடிவடைந்த பின்னர் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் மூலம் இலங்கையின் போர் மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்கள் குறித்த பல தீர்மானங்களை, முன்னைய அரசாங்கங்கள் உரிய முறையில் கையாள தவறிவிட்டதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற 60 ஆவது மனித உரிமைகள் பேரவை அமர்வு மற்றும் அதன் நிறைவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரையை நிகழ்த்தும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முன்னைய எந்த அரசாங்கமும் தேசியப் பிரச்சினையை முறையாக நிர்வகிக்காமையே ஜெனீவாவில் நடக்கும் இந்தச் செயல்பாட்டிற்கான அடிப்படைக் காரணம் எனவும் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெனீவா தீர்மானம்
மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
இது முதல் முறை அல்ல. 1980 களில், 2009 ஆம் ஆண்டில் போர் முடிவடைந்த பிறகும், தற்போதைய மனித உரிமைகள் பேரவை மற்றும் அதன் பழைய அமைப்பான மனித உரிமைகள் ஆணைக்குழு மூலம் இலங்கையின் போர் தொடர்பான மற்றும் பிற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
2009 ஆம் ஆண்டிலிருந்து மட்டும் பார்த்தால், இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் எண்ணிக்கை 11 ஆகும். அவை 2009, 2012, 2013, 2014, 2015, 2017, 2019, 2021, 2022, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஆகும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
