சிங்கப்பூரில் முடிவுக்கு வரும் லீ அரசியல் சகாப்தம்...! பதவி விலகும் பிரதமர்
கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரின் (Singapore) பிரதமராக இருக்கும் லீ சியென் லூங் (Lee Hsien Loong) இன்றுடன் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
உள்ளூர் ஊடகங்களுக்கு அவர் அளித்த இறுதிப் பேட்டியில் சிங்கப்பூர் மக்களின் ஆதரவுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
அத்துடன் மற்ற எல்லோரையும் முந்த வேண்டும் என நான் முயற்சிக்கவில்லை. அனைவரையும் என்னுடன் சேர்ந்து ஓட வைக்க முயற்சித்தேன், நாங்கள் சில வெற்றிகளைப் பெற்றுள்ளோம் என்று லீ சியென் லூங் (Lee Hsien Loong) குறிப்பிட்டுள்ளார்.
மூத்த அமைச்சராக அமைச்சரவை
நவீன சிங்கப்பூரின் நிறுவுநரும் முதலாவது பிரதமருமான தனது தந்தை லீ குவான் யூ ஆட்சியில் இருக்கும் போதே லீ சியென் லூங் பின்வரிசை உறுப்பினராக அரசியலில் சேர்ந்தார். சிங்கப்பூரின் இரண்டாவது பிரதமரான கோ சோக் டோங்க் இன் கீழ் அவரது பதவி உயர்ந்தது. 2004 இல் அரசுக்குத் தலைமையேற்றார்.
அவரது மேற்பார்வையின் கீழ், சிங்கப்பூரின் பொருளாதாரம் பன்முகப்படுத்தப்பட்டு வளர்ச்சியடைந்தது. அந்நாடு ஒரு சர்வதேச நிதி அதிகார மையமாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மாறியது.
எனினும், பதவியில் இருந்து விலகும் பிரதமர் லீ மூத்த அமைச்சராக அமைச்சரவையில் நீடிக்கவுள்ளார்.
இந்நிலையில், அந்நாட்டின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங்கிடம் (Lawrence Wong) இன்று இரவு (புதன்கிழமை, மே 15) லீ முறைப்படி ஆட்சியை ஒப்படைப்பார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது சிங்கப்பூரின் வரலாற்றில் 59 ஆண்டுகள் நீடித்த ஓர் அரசியல் சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |