சம்பள முரண்பாட்டிற்கு நிரந்தர தீர்வு கோரி அதிபர், ஆசிரியர்கள் விரைவில் பாரிய போராட்டம்
அதிபர் ஆசிரியர்களின் சம்பள நிலுவைகளை கோரி ஒக்டோபர் 24ஆம் திகதி கொழும்பு மத்திய கல்வி அமைச்சுக்கு முன்பாக பாரிய போராட்டம் இடம்பெறவுள்ளது.
இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் படி அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ஜெயராயசிங்கம் கோல்வின் அழைப்பு விடுத்துள்ளார்.
இன்றைய தினம் (07) யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிர்வாகப் பிரச்சனைகள்
'இலங்கையில் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள நிலுவை பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாமல் இருப்பதால் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ஆசிரியர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கெடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த சம்பள நிலுவை தொடர்பில் அரசாங்கத்துடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தையினை நடத்திய போதும் இதுவரை முறையான தீர்வுகள் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த வருடம் (2022) ஆசிரியர்களின் சம்பள நிலுவையை கோரி கொழும்பில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது அதில் சில கோரிக்கைகளை மட்டுமே அரசாங்கம் நிறைவேற்றியது.
ஆனால், அதிபர் ஆசிரியர்களின் ஏனைய நிலுவைகள் மற்றும் நிர்வாகப் பிரச்சனைகள் இன்னமும் தீர்க்கப்படாமலே உள்ளது, எனவே அவற்றை தீர்க்க வேண்டும் என்று முகமாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக தற்போது போராட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.
பல ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களில் கடமையாற்றி வரும் நிலையில் அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவையை அரசாங்கம் வழங்க வேண்டும்.
ஆகவே, அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு நிரந்தர தீர்வை காணும் முகமாக ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி அனைத்து அதிபர்களும் ஆசிரியர்களும் இணைந்து கொழும்பில் மேற்கொள்ளவுள்ள உரிமைப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்' என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ஜெயராயசிங்கம் கோல்வின் தெரிவித்துள்ளார்.