தம்புள்ளையில் வாகன விபத்து: படுகாயமடைந்த பாடசாலை அதிபர் உயிரிழப்பு
கடந்த ஜுன் மாதம் 11 ம் திகதி தம்புள்ளை கெக்கிராவா பிரதான வீதியின் சிறப்பன காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்கில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த அதிபர் இன்று(4) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ஐயன்கன்குளம் மகா வித்தியாலயம் மற்றும் மல்லாவி மத்திய கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், கல்விளான் குளம் மகாவித்தியாலயத்தின் அதிபருமான இராசேந்திரன் நிக்சன் வயது (48) என தெரியவந்துள்ளது.
சுற்றுலா சென்று விட்டு மல்லாவி திரும்பிக் கொண்டிருந்த வாகனம், வீதி ஓரம் நின்றிருந்த பேருந்துடன் மோதி விபத்து இடம்பெற்று இருந்தது. இந்த சம்பவத்தில் அதிபர் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி இருந்தார்.
மேலதிக விசாரணைகள்
இவர், காயங்களுக்கு உள்ளாகி அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு நரம்பியல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலதிக விசாரணைகள் சிறப்பன காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.