தமிழர்களின் நீண்ட கால கோரிக்கை ஈடேறுமா? வலுக்கும் அரசின் மீதான நம்பிக்கை
தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையான தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம், குறைந்த வேகத்திலாவது அசையத் தொடங்கியிருப்பது சிறந்த விடயம் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நற்கருமத்தை முழுமைப்படுத்துவதன் மூலம் அரசின் மீதான மக்களின் எதிர்பார்ப்பு ஈடேறும் என நம்பலாம் எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால், பயங்கரவாத தடைச் சட்டத்தின் 13வது பிரிவுக்கமைய, அமைக்கப்பட்டுள்ள ஆலோசனைச் சபை உருவாக்கம் குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சபையானது, பயங்கரவாத நடவடிக்கைகள் சம்பந்தமாக சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றவர்கள், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் ஆராய்ந்து, இவர்களுக்கான விடுதலைப் பொறிமுறையினை கண்டறிந்து, ஜனாதிபதிக்கான பரிந்துரை ஆலோசனையைச் செய்யுமென்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த முன்னேற்ற முன்னெடுப்பினை பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ‘குரலற்றவர்களின் குரல் அமைப்பு’ வரவேற்பதாகவும்,
ஆலோசனைச் சபையின் செயற்கருமங்கள் எப்போதும் போல் காலத்தால் அள்ளுண்டு போகாது, ‘தமிழ் அரசியல் கைதிகளின் நீண்ட கொடுஞ்சிறை வாழ்வுக்கு முழுமையான தீர்வினைப் பெற்றுத் தர வேண்டும்’ என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.