கைதிகளை நிர்வாணமாக்கி சோதனை நடத்தப்படுவது தொடர்பில் சிறைச்சாலை பேச்சாளர் வெளியிட்டுள்ள தகவல்
கைதிகளின் ஆடை கழற்றி சோதனை நடத்தப்படுவது வழமை என சிறைச்சாலை பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தவை வருமாறு,
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 தமிழ் அரசியல் கைதிகள், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் நிர்வாணமாக்கப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.
எனினும் சிறைச்சாலையில் அவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றமை தொடர்பில் தாம் அறியவில்லை என சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் தாம் ஆராய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், தமிழர்கள் என இன ரீதியில் வேறுபடுத்தி, தாம் ஒருபோதும் கைதிகளை நடத்துவது கிடையாது என அவர் குறிப்பிட்டார். போதைப்பொருள் தொடர்பிலான சோதனைகள் நடத்தப்படுமாயின், அனைவரிடமும் ஒரே விதத்தில் சோதனைகள் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கைதிகளை நிர்வாணமாக்கி, சோதனைகள் நடத்தப்படுமா? என அவரிடம் குறித்த ஊடகம் கேள்வி எழுப்பியது. ஆடைகள் கழற்றப்பட்டு, சோதனைகள் நடத்தப்படும் என அவர் கூறினார். உலகிலுள்ள எந்தவொரு நாட்டிலும் அவ்வாறான சோதனைகளை நடத்த வேண்டாம் என கூறப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.