இத்தாலியில் சபிக்கப்பட்ட தீவு! அவிழ்க்கமுடியாத மர்மத்திற்கான காரணம்
இத்தாலி நாட்டின் தென்மேற்கில் உள்ள நேப்பிள்ஸ் வளைகுடாவில் அமைந்துள்ளது கயோலா தீவு, சாதாரணமாக மற்றைய தீவுகளைப் போல கண்கவர் அம்சங்களோடு விளங்கினாலும் இங்கே அவிழ்க்கமுடியாத மர்மம் ஒன்று தொட்டுத் தொடர்ந்து வருவதனால் இந்தத் தீவு சபிக்கப்பட்ட ஒரு தீவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அழகிய தோற்றம் கொண்ட இந்தத் தீவிற்கு பின்னால் ஒரு இருண்ட வரலாறு உள்ளது, இந்த தீவை எல்லாருமே சபிக்கப்பட்ட தீவு என அழைப்பது ஏன் தெரியுமா, இந்தத் தீவை யாரெல்லாம் சொந்தமாக வாங்கினார்களோ அவர்கள் எல்லாரும் தீரா கஷ்டத்தில் உழன்றதாக சொல்லப்படுகிறது.
முதன்முதலில் லூகி நெக்ரி என்பவர் 1800-ன் பின்பகுதியில் இந்தத் தீவை சொந்தமாக வாங்கி, அங்கு ஒரு மாளிகையும் கட்டியுள்ளார். ஆனால் இந்த தீவை வாங்கிய சில காலத்திலேயே தனது சொத்துகள் அனைத்தையும் இழந்து நடுத்தெருவிற்கு வந்தார் நெக்ரி.
கப்பல் மாலுமி
பின்னர் 1911-ம் ஆண்டு கேஸ்பேர் ஆல்பெங்கே என்ற கப்பல் மாலுமி இந்த தீவை வாங்கினார், அவரும் சில நாட்களிலேயே கப்பல் விபத்தில் இறந்து போனார்.
அதற்கடுத்து ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஹான்ஸ் ப்ரான் என்பவர் 1920-ல் இந்த தீவை சொந்தமாக்கினார். அவரும் கூடிய சீக்கிரத்தில் இறந்து போகவே இந்த தீவின் துரதிஷ்டம் யாரையும் விடாமல் துரத்தியது.
இத்தீவின் அடுத்த உரிமையாளர் ஓட்டோ க்ரன்பேக் என்பவர் தீவில் உள்ள தனது மாளிகையில் இருக்கும் போதே மாரடைப்பில் இறந்து போனார், பின்னர் சில வருடங்கள் கழித்து மருந்து உற்பத்தி நிறுவனம் ஒன்றின் தலைவர் மவுரிஸ் சாண்டாஸ் இந்த தீவை சொந்தமாக்கினார். செல்வச் செழிப்பில் வாழ்ந்து வந்த இவர் 1958-ம் ஆண்டு மனநல மருத்துவமனையில் தற்கொலை செய்துகொண்டார்.
இவருக்கு அடுத்து ஜெர்மனைச் சேர்ந்த இரும்பு உற்பத்தி நிறுவன தொழிலதிபர் பேரான் கார்ல் பவுல் என்பவர் இந்த தீவை வாங்கியதுமே சொத்துகளை இழந்து திவாலானார். இதனால் இந்த தீவை பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஃபியாட்டின் உரிமையாளரான கியனி அக்னெல்லிக்கு விற்பனை செய்தார்.
இந்த தீவை வாங்கிய பிறகு பல கஷ்டங்களை சந்தித்தார் அக்னெல்லி, பின்னர் இந்த தீவை அமெரிக்க தொழிலதிபர் பவுல் கெட்டி வாங்கினார். அடுத்த சில மாதங்களில் அவரது 12 வயது இளைய மகன் மூளை கட்டி வந்து இறந்து போனான். அவரது மூத்த மகனும் தற்கொலை செய்து கொண்டான். இதற்கிடையில் அவரது இரண்டாவது மனைவி போதைப்பொருள் உண்டு இறந்தார்.
ஆய்வு மையம்
பின்னர் இறுதியாக கடைசியாக இந்த தீவு காப்புறுதி நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது, அவரும் கடன் செலுத்தாத காரணத்தில் சிறையில் அடைக்கப்பட்டதோடு அவரது மனைவி கார் விபத்தில் இறந்து போனார்.
இப்படி இந்த தீவை வாங்கிய அனைவருமே அகால மரணம் அடைந்துள்ளார்கள் அல்லது அவர்கள் குடும்பத்தில் யாராவது இறந்து போயுள்ளார்கள். அதனால்தான் இந்தத் தீவை சபிக்கப்பட்ட தீவு என அழைக்கிறார்கள்.
இதனால் இந்தத் தீவை வாங்க யாரும் முன்வராத காரணத்தால்,1978-ம் ஆண்டிற்குப் பிறகு இந்த தீவு இத்தாலிய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வந்தது. தற்போது இந்த தீவில் 100 ஏக்கர் பரப்பளவில் கடல்வாழ் உயிரினம் குறித்த ஆய்வு மையம் மற்றும் சுற்றுச்சூழல் கல்வியை கற்றுக் கொடுக்கும் மையம் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |