அண்ணன்கள் பதவியில் இருப்பதால் தம்பிக்கு சலுகையா? நாடாளுமன்றில் சரமாரி கேள்வி
நாட்டில் நிலவும் பொருளாதார நிலை தொடர்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார உள்ளிட்டோர் இந்தக் கோரிக்கையை விடுத்தனர்.
பால்மாவின் விலை 300 ரூபாவினால் உயர்ந்துள்ளது. எரிபொருளின் விலை 54 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. மருந்துகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் 367 பொருட்களுக்கு இறக்குமதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பசில் ராஜபக்ச நிதியமைச்சர் என்ற வகையில் நிலைமை தொடர்பில் பதிலை வழங்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார் அவை முதல்வர் தினேஸ் குணவர்த்தன, துடுப்பாட முடியாத ஆடுகளத்தில் நின்று கொண்டு அரசாங்கத்தை காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்.
குறைந்தது தினேஸ் குணவர்த்தன கூறுகின்ற பதிலையாவது பசில் ராஜபக்சவினால் கூறமுடியும் என்று அநுரகுமார குறிப்பிட்டார்.
இந்த விடயத்தில் எதிர்கட்சியின் கருத்துக்களுக்கு மூத்த அமைச்சர் சமல் ராஜபக்சவும் உடன்படுவார் என்று தாம் நினைப்பதாக அவர் தெரிவித்தார்.
நாட்டில் சாதாரண நிலை நிலவுமானால், பசில் ராஜபக்ச நிதியமைச்சருக்காக மற்றும் ஒரு அமைச்சர் பதில் வழங்கமுடியும்.
எனினும் தற்போது நிலவுவது அசாதாரண பொருளாதார நிலை என்பதால், நிதியமைச்சரான பசில் ராஜபக்ச பதில் அளிக்கவேண்டும் என்று அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.
அண்ணன் ஜனாதிபதி, மற்றும் ஒரு சகோதர் பிரதமர், அண்ணன் மூத்த அமைச்சராக இருக்கின்றபோது, தம்பிக்கு சலுகை இருக்கலாம் என்று நினைக்கமுடியும் எனினும் நாடாளுமன்றத்தில் இதனை அவரால் மேற்கொள்ளமுடியாது என்றும் அநுரகுமார சுட்டிக்காட்டினார்.
இதேவேளை நாட்டை வீழ்ச்சியடைய செய்வதற்காக அமெரிக்ககாரன் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளே தற்போது இடம்பெறுகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
