14 குழந்தைகளின் உயிரை பறித்த இருமல் மருந்து! இந்தியாவில் சோக சம்பவம்
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்து பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
சர்ச்சைக்குரிய இருமல் மருந்தை பரிந்துரைத்ததாக இந்திய அரச வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள பின்னணியில் குறித்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே அச்சத்தையும் கவலையையும் உண்டாக்கியுள்ளது.
இந்நிலையில் ‘கோல்ட்ரிப்’ எனப்படும் குறித்த இருமல் மருந்து தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டதெனவும், இந்திய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்பதாக, மத்தியப் பிரதேச சிந்த்வாரா மாவட்டத்தில் 1 முதல் 7 வயது வரை குழந்தைகள் கடந்த 15 நாட்களுக்குள் அடுத்தடுத்து சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்துள்ளனர்.
சிறுநீரக செயலிழப்பு
திடீரென ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு உயிரிழப்புக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கோல்ட் ரிப், இருமல் மருந்துகளை அந்தக் குழந்தைகள் உட்கொண்டது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலீன் கிளைசால் எனப்படும் இரசாயன வேதிப்பொருள் இருந்ததாக பகுப்பாய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்நிலையில் நிறப்பூச்சு, பேனா மை போன்றவை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனம், சம்பந்தப்பட்ட இருமல் மருந்துகளில் கலந்திருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் விளக்கியுள்ளன.
மத்திய பிரதேசத்தில் கடந்த 3ஆம் திகதி வரை இருமல் மருந்து குடித்ததால் ஏற்பட்ட பாதிப்பால் 11 குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
இருமல் மருந்து
கடந்த ஓகஸ்ட் முதல் செப்டம்பர் வரை 5 வயதுக்கு உட்பட்ட பல குழந்தைகள் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்பட்டதால் மத்திய பிரதேசத்தின் பாராசியாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலருக்கு அங்குள்ள மருத்துவர் ஒருவர் இருமல் மருந்து உள்ளிட்ட மருந்துகளை பரிந்துரைத்துள்ளார். இந்நிலையிவல் சில நாட்கள் கழித்து குழந்தைகளுக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை, முக வீக்கம் மற்றும் வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அவர்களுக்கு சிறுநீரகம் செயலிழந்தமை தெரியவந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த மருந்து குழந்தைகளுக்கு ஆபத்தாகக் கூடும் என்று தெரிந்த போதிலும் கூட விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு, சிறு குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது என அந்நாட்டு ஊடகங்களில் மேலும் கூறப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் என்ற குறித்த இருமல் மருந்தை மத்திய பிரதேச அரசு தடை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
