சதித்திட்ட குழுக்களால் பெரும் சிக்கல் - அரச தலைவர் விசனம்
இலங்கை மக்களுக்கு சரியானதைச் செய்தாலும் அதனைத் தடுப்பதற்கு பல்வேறு குழுக்கள் பல சதித்திட்டங்களை வகுப்பதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) விசனம் வெளியிட்டுள்ளார்.
இவ்வாறான சதி முயற்சிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகார சபைக்கு இன்று திடீர் விஜயத்தை மேற்கொண்ட அரச தலைவர், வலுசக்தி அதிகார சபையின் முகாமைத்துவம், ஆராய்ச்சி, மூலோபாயத் திட்டம், வலுசக்தி முகாமைத்துவம் போன்ற பிரிவுகளுக்குச் சென்று அவற்றின் பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அரச தலைவர், ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தவிர்ப்பதற்கே சட்டம் காணப்படுகின்றது என்றும் சரியானதைச் செய்ய சட்டம் ஒருபோதும் தடையாக இருப்பதில்லை என்றும் குறிப்பிட்டார்.
இலக்கு வைக்கப்பட்ட திட்டங்களைச் செயற்படுத்தும் போது, தேசிய தேவையை மாத்திரம் கவனத்திற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்திய அரச தலைவர், எதிர்காலத்துக்காக திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்கள் தாமதமாவதால், உலகத்தின் முன் நமது நாடு பல வருடங்களுக்கான பின்னடைவைச் சந்திக்குமென்றும் எடுத்துரைத்தார்.
வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், இந்நாட்டின் மின்சாரத் துறையில் காணப்படும் தடைகளைத் தகர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் எனவும்,
இதனால் ஒரு இலட்சம் வீட்டுக் கூரைகள் மீது சூரியசக்திப் படலங்களைப் பொருத்தும் வேலைத்திட்டத்தைத் துரிதப்படுத்தி, அதன் பயனைக் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறும், இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு அரச தலைவர் ஆலோசனை வழங்கினார்.
அதேபோன்று, நாட்டுக்குள் தற்போது ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடிக்கு, மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவலுப் பயன்பாட்டின் மூலம் குறுகிய காலத்துக்குள் தீர்வு காண்பதற்குள்ள இயலுமை தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.
