அன்று கோட்டாபய வழங்கிய வாக்குறுதி!! நினைவுபடுத்திய பேராசிரியர் திஸ்ஸ விதாரன
இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் தொடர்பில் அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் முரண்பாடற்ற யோசனை உள்வாங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாக்குறுதி வழங்கினார். இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்ப்பதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
இரட்டை குடியுரிமையினை உடையவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் தடை விதிக்கப்பட்டது. இதனை சிறந்த ஒரு செயற்பாடு என வரவேற்றோம். இத்தடை அரசியலமைப்பின் 20 ஆவது திருத்ததில் நீக்கப்பட்டது.
இரட்டை குடியுரிமையினை உடையவர்கள் தேர்தலில் போட்டியிடுவதுடன், அரச உயர் பதவிகளில் தலைமைத்துவம் பதவி வகிக்கலாம் என அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபில் குறிப்பிடப்பட்டது. இதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் பிரதான பங்காளி கட்சியினர் கடுமையான எதிர்ப்பை ஒன்றிணைந்து வெளிப்படுத்தினோம்.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை தற்காலிக ஏற்பாடாக மாத்திரம் கருத வேண்டும். இரட்டை குடியுரிமை உடையவர்களுக்கு 20 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்ட சலுகை புதிய அரசியமைப்பின் ஊடாக நீக்கப்படும்.
இதேவேளை, இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் தொடர்பில் அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் முரண்பாடற்ற யோசனை உள்வாங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாக்குறுதி வழங்கினார். இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கிறோம்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணிக்கும் இடையிலான முரண்பாடுகள் நாளாந்தம் தீவிரமடைந்துள்ளதே தவிர குறைவடையவில்லை.
பல விடயங்கள் கூட்டணியை பலவீனப்படுத்தியுள்ளன. இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுமாறு சிரேஷ்ட தலைவர்களுக்கு கோரிக்கை விடுத்தும் பயனற்றதாக உள்ளது என்று குறிப்பிட்டார்.