மக்கள் பிரதிநிதிகளுக்கும் - மக்களுக்கும் வெவ்வேறு சட்டமா...! நீதிமன்றத்தால் கூட வினவ முடியாது என்கிறது அரசாங்கம்
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சொத்துச் சேதம் மற்றும் நாடாளுமன்றம் தொடர்பான ஏனைய சம்பவங்கள் தொடர்பில் நாட்டின் வழமையான சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
முன்னாள் அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உடமைகளை சேதப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் கைது செய்யப்படாத வேளையில், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்களை அழிப்பதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அடக்குமுறைகள் நடத்தப்படுவது குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் பதில் வழங்கிய அவர்,
“இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திற்குள் மட்டுமே பேச முடியும். நீதிமன்றத்தால் கூட கேள்வி கேட்க முடியாது.
நாடாளுமன்றத்தில் இடம்பெறும் எந்தவொரு சம்பவமும் சபாநாயகரால் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படும். அதன் பின்னர் நாடாளுமன்றத்தினால் விசாரணை நடத்தப்படும்.
சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படாவிட்டால், அதுதொடர்பான கேள்விகளை சபாநாயகரிடம் இருந்து கேட்க வேண்டும்” என்றார்.
