போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சிறையில் அடைக்க அரசாங்கம் திட்டம்
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு
இலங்கையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சிறையில் அடைப்பதம்ற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.
மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சில முக்கிய செயற்பாட்டாளர்கள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதையும் அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு கோட்டை மற்றும் தலங்கம ஆகிய இடங்களில் கடந்த ஜூன் மாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் கட்டுக்கடங்காமலும் வன்முறையிலும் ஈடுபட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சமூக ஆர்வலரும் யூரியூபருமான ‘ரட்டா’ எனப்படும் ரதிந்து சேனாரத்ன மற்றும் மாற்றத்திற்கான இளைஞர்கள் அமைப்பின் தேசிய அமைப்பாளர் லஹிரு வீரசேகர உள்ளிட்ட ஏழு பேர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் எழுச்சியை மூழ்கடிக்க சதி
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, இவ்வாறான சில கைதுகளால் மக்கள் இயக்கத்தை மூழ்கடிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
மக்கள் போராட்டத்தில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கும் தமது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்குமே ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக ராஜபக்ஸ தரப்பினர் கொண்டுவந்தார்கள் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
அமைதியான போராட்டத்தில் ஈடுபட்ட 2 ஆயிரத்து 900 ற்கும் மேற்பட்ட இளைஞர்களை காவல்துறையினர் கைதுசெய்துள்ளதாகவும் வசந்த முதலிகே குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனினும் அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு தாம் அடிபணிய மாட்டோம் எனவும் தமது போராட்டங்கள் தொடரும் எனவும் அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மேலும் வலியுறுத்தியுள்ளார்.