காவல்துறையின் அத்துமீறல் கொதித்தெழுந்த மக்கள்
நீண்ட வரிசையில் பெட்ரோலை பெற நின்ற மக்கள்
நுவரெலியா நகரில் உள்ள ஐஓசி எரிபொருள் நிலையத்தில் நீண்ட வரிசையில் பெட்ரோலை பெறுவதற்காக நின்ற மக்களுக்கும் திடீரென வரிசையின்றி பெட்ரோலை பெற வந்த காவல்துறையினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.
பெட்ரோல் பெறுவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு நுவரெலியா காவற்துறையினர் டோக்கன் வழங்கியதுடன், அந்த டோக்கன் பிரகாரம் மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி மற்றும் ஏனைய பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்பட்டது.

பதட்டமான சூழ்நிலை
இதன்போது திடீரென தமது மோட்டார் சைக்கிள்களுக்கு பெட்ரோல் பெற வந்த காவல்துறையினரால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. அமைதியற்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு நுவரெலியா காவல்நிலைய தலைமையக காவல் பரிசோதகர் சம்பவ இடத்திற்கு வந்து டோக்கன் இன்றி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வெளியே எரிபொருள் எடுக்க வந்த காவல்துறை அதிகாரிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.

இதற்கிடையில், ஐஓசி எரிபொருள் நிலையங்களில் இருந்து மோட்டார் சைக்கிள்களுக்கு எரிபொருளை வழங்கும் போது, சில மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இயந்திரக் கோளாறு ஏற்பட்ட மோட்டார் சைக்கிள்களை பெட்ரோல் நிலையத்திற்குத் தள்ளி வந்து, எரிபொருளைப் பெற்று, பின்னர் அந்த மோட்டார் சைக்கிளுக்கு பெறப்பட்ட எரிபொருளை கானடகளில் எடுத்துச் சென்றதாகவும் தெரிய வருகிறது.