யாழ் தையிட்டியில் வலுக்கும் போராட்டம் : குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்
யாழ்ப்பாணம்(Jaffna) - தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமாகா விகாரை மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளை மீளக் கையளிக்கக் கோரி முன்னெடுக்கப்படும் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் (12) தொடர்கின்றது.
காணி உரிமையாளர்களினால் முன்னெடுக்கப்படும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் பலரும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
போராட்டத்தில் கலந்துகொண்டோர்
இந்த நிலையில் குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், அரசியல் கட்சி ஆதரவாளர்கள், காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும் ”பௌத்தம் உன் மதம் வழிபடு தையிட்டி என் மண் வழி விடு”, ”சட்டவிரோத விகாரை கட்டுமானத்தை உடனடியாக அகற்று” , ”கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை நிறுத்து” போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு அருகில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






