அமெரிக்காவில் ட்ரம்ப், எலோன் மஸ்க்கிற்கெதிராக வெடித்தது போராட்டம்
அமெரிக்க(us) ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் (donald trump)பதவியேற்று ஒரு மாதமாகும் நிலையில், அவருக்கு எதிராக வோஷிங்டனில் நேற்று திங்கள்கிழமை (17) பாரியளவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அரசு நிறுவனங்களில் பெருமளவில் ஆட் குறைப்பு செய்வதற்கான அவரது நிர்வாகத்தின் முயற்சிகள் மற்றும் ஆவணமற்ற குடியேறிகளை நாடு கடத்துவது உள்ளிட்ட கொள்கைகளை எதிர்த்து திங்களன்று வோஷிங்டனிலும் அமெரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கானோர் இந்த பேரணியை நடத்தினர்.
எலோன் மஸ்க்குக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம்
மேலும், அரசுத் துறைகளில் தொழிலதிபர் எலோன் மஸ்க்குக்கு(elon musk) அளிக்கப்படும் முக்கியத்துவத்தை கண்டித்தும் போராட்டக்காரர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் பெப்ரவரி 17-ஆம் திகதி ஜனாதிபதி நாள் அனுசரிக்கப்படும். இந்த நிலையில், 50501 என்ற இயக்கத்தை சேர்ந்தவர்கள், ‘ஜனாதிபதி நாளில் அரசர் வேண்டாம்’ என்ற பாதகைகளுடன் நாடு முழுவதும் நேற்று போராட்டம் நடத்தினர்.
கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் ட்ரம்பிற்கு எதிராக முழக்கம்
வோஷிங்டனில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் ட்ரம்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
அதேபோல், புளோரிடா மற்றும் கலிபோர்னியா மாகாணங்களிலும் போராட்டம் நடைபெற்றது.
பிறப்பால் குடியுரிமை தடைச் சட்டம் போன்ற ட்ரம்ப்பின் அதிரடி உத்தரவுகளுக்கு எதிராகவும், அரசு செயல்திறன் துறையில் எலோன் மஸ்க்குக்கு முக்கியத்துவம் அளிப்பதை எதிர்த்தும் போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.
மஸ்க்கை உடனடியாக அரசுத் துறையில் இருந்து வெளியேற்ற வேண்டும்
பாஸ்டன் நகரில் பனிப்பொழிவுக்கு மத்தியில் பேரணியாகச் சென்றவர்கள், எலோன் மஸ்க்கை உடனடியாக அரசுத் துறையில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனத் தெரிவித்தனர்.
இதேபோன்ற போராட்டத்தை கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக பெப்ரவரி 5 ஆம் திகதி 50501 இயக்கத்தினர் நடத்தினர்.
இந்த நிலையில், அரசு செயல்திறன் துறைக்கான ஜனாதிபதியின் ஆலோசகராக மட்டுமே எலோன் மஸ்க் செயல்படுவதாகவும், அவருக்கு முடிவெடுக்கும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை என்றும் வெள்ளை மாளிகை தரப்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் திங்கள்கிழமை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





தாய்மொழிக்காய் ஆயுதம் தரித்துத் தம்முயிர் ஈர்ந்தவர்கள் ஈழ மாவீரர்கள் ! 18 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்