தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலை : நீதி கோரி யாழில் வெடித்த போராட்டம்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வும், அவர்களின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்றைய தினம் (28.04.2025) யாழ்ப்பாணத்தில் (Jaffna) அமைந்துள்ள படுகொலையான ஊடகவியலாளர்களின் நினைவு தூபி முன்பாக இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் ஊடக அமையம், கிழக்கிலங்கை ஊடகவியலாளர்கள் ஒன்றியம், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அஞ்சலி நிகழ்வு
மேலும் அஞ்சலி நிகழ்வு ஆரம்பிக்கப்பட முன்னரே, நினைவு தூபி அமைந்துள்ள பகுதியில் பெருமளவான காவல்துறையினர் சீருடைகளுடன், சிவில் உடைகளுடனும் குவிக்கப்பட்டிருந்தனர்.
அத்துடன் பெருமளவான புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு, அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதுடன் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் என்பனவும் இதன்போது எடுக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளரான தராக்கி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் (Taraki Sivaram) கடந்த 2005 ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 28ம் திகதி கொழும்பு (Colombo) பம்பலப்பிட்டி காவல் நிலையத்திற்கு அருகில் வைத்து வெள்ளை வானில் வந்த இனம் தெரியாதவர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இதேவேளை, ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் அச்சு ஊடகம் ஒன்றின் அலுவலக செய்தியாளராக கடமையாற்றி வந்த வேளை கடந்த 2007ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 29ம் திகதி காலை 10 மணியளவில் ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்தி : பிரதீபன் மற்றும் கஜிந்தன்
இதேவேளை, ஊடகவியலாளர் மாமனிதர் "தராகி" சிவராமின் 20 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு (Mullaitivu) ஊடக அமையத்தில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது
முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவர் கணபதிப்பிள்ளை குமணன் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் ஊடகவியலாளர் சிவராமின் திருவுருவப்படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு சுடரேற்றி மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
செய்தி : சண்முகம் தவசீலன்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான தராகி சிவராம் மற்றும் செல்வராசா ரஜிவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு வடமராட்சி ஊடக இல்லத்தில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்களான தராகி சிவராமின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், செல்வராசா ரஜிவர்மனின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (28.04.2024) திங்கட்கிழமை பகல் 11.00 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
யாழ். வடமராட்சி ஊடக இல்ல செயலாளர் இரா.மயூதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட தராகி சிவராம் மற்றும் செல்வராசா ரஜிவர்மன் ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு வடமராட்சி ஊடக இல்ல் தலைவர் கு.மகாலிங்கம் மாலை அணிவித்தார்.
தொடர்ந்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் பங்கேற்றிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







