கொட்டும் மழையிலும் 26ஆவது வாரமாக தொடரும் மயிலிட்டி மக்களின் நிலமீட்புப் போராட்டம்!
தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ்ப்பாணம் - மயிலிட்டி மக்கள் முன்னெடுத்துவரும் தொடர் போராட்டம் 26ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்டது.
கொட்டும் மழை உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் இன்று (16.10.2026) குறித்த போராட்டம் நடைபெற்றது.
தமது பூர்வீக நிலங்களை மீளப் பெற்றுக்கொள்வதற்காகத் தொடர்ந்து வீதியில் இறங்கிப் போராடிவரும் மயிலிட்டி மக்கள், தமது நீண்டகாலக் கோரிக்கைக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
போராட்டத்திற்கு உரிய தீர்வு
பல வாரங்களாகத் தொடரும் இப்போராட்டத்தின் மூலம் தமது காணிகளை மீளப் பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கையை மக்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் நிலையில் தமது கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்காத நிலையில், போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையில், விரைவில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வருகை தரவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வருகையின்போது, 26வாரங்களாகத் தொடரும் தமது போராட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் மயிலிட்டி மக்கள் காத்திருக்கின்றனர்.
தமது பூர்வீக மண்ணை மீளப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடன், மயிலிட்டி மக்களின் போராட்டம் 26ஆவது வாரத்தையும் கடந்து தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |