மண் கொள்ளை வேண்டும் என்று மட்டக்களப்பில் நடக்கும் ஒரு புதினமான போராட்டம்!!
‘புதினமான ஊருக்குப் போனால் ஏதோ ஒன்றால் புகைவருமாம்' என்று மட்டக்களப்பு கிராமங்களில் கூறுவார்கள்.
மட்டக்களப்பில் தற்பொழுது நடக்கின்ற ஒரு 'புதினமான' உண்ணாவிரதப் போராட்டத்தைப் பார்க்கின்றபோது ஏனோ தெரியவில்லை இந்தப் பழமொழிதான் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கின்றது.
மண் அனுமதி பத்திரம் கேட்டு அங்கு ஒரு போராட்டம் நடக்கின்றது.
சட்டவிரோத மண் கொள்ளையினால் மட்டக்களப்பே சுடுகாடாகின்றது என்று ஒரு பக்கம் மக்கள் அதற்கெதிராகப் போராட்டங்கள் நடத்திக்கொண்டிருக்க, மணல்கொள்ளை நடக்கவேண்டும் என்பதுபோல நடக்கின்றது மற்றொரு போராட்டம்.
அங்கு நடக்கின்ற இந்தப் 'புதினமான' போராட்டம் பற்றி மட்டக்களப்பு மக்களிடம் கேள்வி எழுப்பினோம்:
‘மண்ணுக்காக போராடிய தமிழர்களை மண் அனுமதிப் பத்திரத்திற்காக போராட வைத்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களை கேவலப்படுத்திவருகின்றது தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு’ என்று கோபத்துடன் கூறுகின்றார்கள் சில இளைஞர்கள்.
'தமிழர்களின் வாழ்வியலில் மிகவும் உன்னதமான அதியுச்ச தியாகமாக கருதப்படும் உண்ணாவிரதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் சிலரை தூண்டிவிட்டு மண் அனுமதி பத்திரம் வேண்டும் என்று கோரி அதற்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் அளவுக்கு தமிழ் உணர்வாளர் அமைப்பு என்ற பெயரை வைத்துக் கொண்டு தமிழ் உணர்வுகளை புண்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்' என்றார் மற்றொரு இளைஞன்.
மாவட்டத்தில் பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரை பிரச்சினை, காணாமல் போனோர் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை, யானைப் பிரச்சினை, காணிப் பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை என்று எவ்வளவோ பிரச்சினை இருக்கும் போது மண் அனுமதி பத்திரம் கேட்டு உண்ணாவிரதப் போராட்டம் நடாத்துவதன் நோக்கம் என்ன? குறித்த போராட்டத்திற்காக பல இலட்சம் ரூபாய்களை செலவு செய்து மேடை முதல் கொண்டு சவப்பெட்டி வரை வாங்கி இந்த போராட்டத்தை நடாத்த வேண்டிய நோக்கம் என்ன? இவ்வாறு கேள்வி எழுர்புகின்றார்கள் மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்கள்.
மட்டக்களப்பு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ரனிலின் வழிக்குக்கொண்டுவரும் முகமாகவே இந்த உண்ணாவிரதம் ஏற்பாடுசெய்யப்பட்டதாகக் கூறுகின்றார் அங்கு பணியாற்றுகின்ற ஒரு ஊடகவியலாளர்.
குறிப்பாக மணல்கொள்ளைக்து எதிராகப் போராடிவருகின்ற வியாழேந்திரனை பலமிழக்கச்செய்யும் நோக்கதிலேயே இந்தப் போராட்டம் இடம்பெறுவதாக அந்த ஊடகவியலாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை தனது அதிகாரத்தை வைத்துக் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு கோடிக்கணக்கில் விற்பனை செய்தவர்கள் இன்று மீண்டும் கூட்டணி வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக தமிழர்களை கேவலப்படுத்தி, மலினப்படுத்தி ஹிஸ்புல்லா உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்களுக்கு பதவிகளை பெற்றுக் கொடுக்க வழிவகை செய்கின்றார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
'மட்டக்களப்பில் இடம்பெற்றுவருகின்ற மணல்கொள்ளை என்பது அந்த மாவட்டத்தையே அழித்து வருகின்றது. அதனால் பதுளை வீதியில் உள்ள குளங்கள், வயல் காணிகள், வீதிகள், உள்ளிட்ட பல அழிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்ட மண் வளம் கொழும்பு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், மணல்கொள்ளைக்காகவே ஒரு போராட்டம் அங்கு நடப்பது மிகப் பெரிய கொடுமை' என்று தெரிவிக்கின்றார் கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு விரிவுரையாளர்.
'மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பிரதேச செயலாளர் வரை இடமாற்றம் செய்யும் அளவுக்கு இந்த மண் மாபியாக்களின் இலஞ்சப் பணம் செல்வாக்கு செலுத்தும் நிலையில் குறித்த மண் மாபியாக்களை ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு அவர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் அரசியல் இருப்புக்கு பயன்படுத்துவதாக கூறிக்கொண்டு ஜனாதிபதி ரணிலை ஏமாற்றும் ஒரு முயற்சி' என்றும் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.