கறுப்பு ஜனவரி தினத்தையொட்டி மட்டக்களப்பில் இன்றும் கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள்)
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக கடைப்பிடிக்கப்படும் கறுப்பு ஜனவரி தினத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றும் கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் அஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றது.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள உயிரிழந்த ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபிக்கு முன்பாக இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
அமைதியான முறையில் கவன ஈர்ப்பு
கறுப்பு ஜனவரி தினத்தை கடைப்பிடிக்கப்படும் முகமாக ஊடகவியலாளர்கள் கறுப்புப் பட்டி அணிந்து அமைதியான முறையில் மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன் பின்னர் காந்திப் பூங்காவில் இருந்து தனியார் பேரூந்து நிலையம் வரை பேரணியாகச் சென்று மீண்டும் காந்தி பூங்காவை வந்தடைந்து தூபியில் சுடரேற்றி அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவதிரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் துமிந்த சம்பத் உள்ளிட்ட உறுப்பினர்கள், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், முன்னாள் கிழக்கு மாகாணசபைப் பிரதித் தவிசாளர், மாநகர சபை உறுப்பினர்கள், அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள், இலங்க ஆசிரியர் சங்க கிழக்கு மாகாண இணைப்பாளர் உதயரூபன் உள்ளிட்ட உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.









