ஈழத்தமிழர்களுக்கு நீதிகோரி ஐ.நா முன்றலில் போராட்டம் (படங்கள்)
ஐ.நா மனித உரிமைப் பேரவையில் தற்போது அதன் 52 வது அமர்வுகள் இடம்பெறும் நிலையில், இன்று பிற்பகல் ஐ.நா முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஐரோப்பிய நேரம் பிற்பகல் 2.00மணியளவில் மனித உரிமை பேரவை முன்றலிலுள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அறவழிப்போராட்டம்

தமிழர் தாயகம் மீதான ஒடுக்குமுறைகளுக்கும் படுகொலைகளுக்கும் நீதிகோரியும், ஈழத்தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வுகோரியும் இந்த அறவழிப்போராட்டம் இடம்பெற்றது.
இதில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து சென்ற பல உணர்வாளர்கள் பங்கேற்றுள்ளனர்.


மனித நேய மிதிவண்டிப் பயணம்
இன்றைய கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணைகோரி 26 தடவையாக பிரித்தானியாவில் இருந்து பயணித்த மனித நேய மிதிவண்டி செயற்பாட்டாளர்களும் பங்கெடுத்துள்ளனர்.
கடந்த 17 நாட்களாக பிரித்தானியா , நெதர்லாந்து , பெல்ஜியம் , லக்ஸம்பேர்க் ஜேர்மனி , பிரான்ஸ், சுவிஸ் ஆகிய நாடுகள் ஊடாக பயணித்த இந்த செயற்பாட்டாளர்கள் நேற்று மாலை ஈகைப்பேரொளி முருகதாசன் திடலை சென்றடைந்தனர்.
இந்த மிதிவண்டி பயணம் பிரித்தானிய பிரதமர் வதிவிடம், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம், ஐரோப்பிய ஒன்றியம், மாநகர சபைகள், ஐரோப்பிய ஆலோசனை அவை, ஐரோப்பிய நாடாளுமன்றம் மற்றும் பல முக்கியமான உள்ளுராட்சி மையங்களில் முறையீட்டு மனுக்களை கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.