வலி. வடக்கு காணி விடுவிப்பு கோரி யாழில் தொடர் போராட்டம்!
யாழ்ப்பாணம் - வலிகாமம், வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இராணுவத்தினரின் "கொமோண்டோ" பங்களா முன்பாக இன்று (12) அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வலி. வடக்கு பலாலியைச் சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.
உயர்பாதுகாப்பு வலயம்
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.

இந்த நிலையில் தமது 650 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில் இன்றும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை(15) யாழ்ப்பாண அரசாங்க அதிபர் செயலகத்திற்கு முன்பாக பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
குறித்த போராட்டத்தில் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம், வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.பிரகாஸ், பருத்தித்துறை நகர சபையின் தவிசாளர் டக்ளஸ் போல், பொதுமக்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


