மாகாணங்களுக்கிடையே பயணம் மேற்கொள்வோர் தொடர்பில் அஜித் ரோஹண வெளியிட்டுள்ள அறிவிப்பு!
மாகாணங்களுக்கு இடையில் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் நெருங்கிய உறவினரின் மரணம் அல்லது மருத்துவ தேவைக்காக மாத்திரம் பயணிக்கலாம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
எனினும், இவ்வாறு பயணம் மேற்கொள்வோர் உரிய ஆவணங்கள் அல்லது இலத்திரனியல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்தத அவர்,
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில், கடந்த 24 மணித்தியாலத்தில் 245 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனடிப்படையில், கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 50,994 ஆக அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறி, மேல்மாகாணத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த 293 பேரையும் அவர்கள் பயணித்த 139 வாகனங்களுடன் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.