மாகாணசபை திருத்தச்சட்டமூலம் செயற்திறனற்றதாகவுள்ளது - டலஸ் அழகப்பெரும
பங்காளி கட்சிகள் என்ற ரீதியிலோ அல்லது வேறு தரப்பினரோ மாகாணசபை முறைமையை நீக்குமாறு எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாணசபை முறைமையை நீக்குவது தொடர்பில் எந்தவொரு கலந்துரையாடலும் முன்னெடுக்கப்படவில்லை. அவ்வாறானதொரு நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை.
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் செயற்பாடுகள் பூரணமடையாமையின் காரணமாக கடந்த அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2017 (17) மாகாணசபை திருத்த சட்டமூலம் செயற்திறனற்றதாகவுள்ளது.
எனவே மீண்டும் அந்த சட்ட மூலத்தை பலப்படுத்த வேண்டும். அவ்வாறில்லை என்றால் புதிய சட்டமூலத்தை தயாரிக்க வேண்டும்.மாகாணசபை தேர்தல் முறைமை தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) செயற்பட்டு வருகின்றார்.
அவர் நாடாளுமன்றத்தில் யோசனையொன்றை முன்வைத்து மேலும் இரு மாதங்களுக்கு மாகாணசபையின் காலத்தை நீடித்துள்ளார்.