மாகாணசபை தேர்தல் சர்ச்சை! தெரிவுக்குழு விவகாரத்தில் காலத்தை கடத்தும் அரசாங்கம்
மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தும் மாகாணசபை தேர்தலை நடத்துவது தொடர்பாக இந்த அரசாங்கமானது தெரிவு குழு விடயத்தை கொண்டு வருவது ஒரு காலத்தை கடத்துகின்ற நாடகம் என ரெலோ கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளருமான சபா குதாஸ் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபை தேர்தல்
“அரசாங்கமானது மாகாண சபை தேர்தலை நடாத்துவது தொடர்பான தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான பிரேரணையை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மூலமாக நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரவுள்ளது.

உண்மையிலேயே இந்த அரசாங்கமானது மாகாண சபை தேர்தலை நடத்துவதற்காக தெரிவுக் குழுவை நியமிப்பது என்பது ஒரு அவசியமற்ற விடயம்.
ஏனெனில் இந்த அரசாங்கமானது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டுள்ளது. உண்மையிலேயே மாகாண சபை தேர்தலை நடத்துவதாக இருந்தால் இந்த அரசாங்கம், 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 17ஆம் இலக்க சட்டத்தை மாற்றியமைத்து உடனடியாக பழைய முறை மூலம் தேர்தலை நடாத்த முடியும்.
அவ்வளவு அதிகாரமும் பலமும் இந்த அரசிடம் உள்ளது. இந்த தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அனுர அரசுக்கு விருப்பம் இல்லாத காரணத்தினாலேயே இந்த தெரிவு குழுவை கொண்டு வருகின்றது.
எல்லை நிர்ணயம்
கடந்த காலத்தில் முரண்பாடாக இருந்த அந்த எல்லை நிர்ணயம் என்ற விடயத்தை மீண்டும் கொண்டு வந்து காலத்தை இழுத்தடிக்கின்ற நோக்கத்தில் தான் இந்த தெரிவுக்குழு விடயத்தை பிரேரணை மூலமாக நாடாளுமன்றத்தில் கொண்டு வருகின்றார்கள்.

கடந்த காலத்தில் எதிர்க்கட்சியில் இருந்த அனுரகுமார உள்ளடங்கலான தரப்பினர், கடந்த ஆட்சியாளர்கள் இவ்வாறான தெளிவுக்குழுவை கொண்டு வரும்போது கடுமையாக விமர்சித்தவர்கள்.
இந்த தெரிவுக்குழுக்கள், ஆணைக்குழுக்கள் எல்லாம் காலத்தை கடத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை நீர்த்துப்போக செய்கின்ற ஒரு விடயம் என்பது அனைவருக்கும் தெரியும்.
அந்த அடிப்படையிலேயே இந்த மாகாண சபை தேர்தல் தொடர்பான தெரிவிக்கு குழுவும் கொண்டுவரப்படுகின்றது” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |