மாகாண சபைகளுக்கும் காவல்துறை அதிகாரங்கள் உண்டு : சுரேஷ் பகிரங்கம்
மாகாண சபைக்கும் காவல்துறை அதிகாரங்கள் இருக்கின்றன. முழுமையான காவல்துறை அதிகாரங்கள் அல்ல ஆனால் ஒவ்வொரு மாகாண சபையும் தங்களுக்கான மாகாண காவல்துறையை உருவாக்க முடியும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர், “மாகாணத்தில் தமக்கான காவல்துறையை ஆட்சேர்ப்பு செய்வது, பயிற்சியளிப்பது, பதவி உயர்வுகளை வழங்குவது போன்றன மாகாண சபைக்கு உட்பட்டிருக்கும்.
அந்த வகையில் மாகாண சபைகளுக்கு குறிக்கப்பட்ட அளவு காவல்துறை அதிகாரங்கள் பகிரப்பட்டிருப்பது என்பது உண்மையான விடயம். ஆனால் இலங்கை அரசாங்கம் அந்த அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கவில்லை என்பது வேறொரு விடயம்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த மாகாணசபை இருந்த பொழுது காவல்துறை உருவாக்கப்பட்டது. அப்பொழுதிருந்த முதலமைச்சருக்கும் பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
அதன் அடிப்படையில் வடக்கு கிழக்கில் 3000 காவல்துறையினரை உருவாக்குவது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் ஒரு தொகுதி காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
அதேநேரம் அரச காணிகள் மத்திய அரசாங்கத்திற்கு சொந்தமாக இருந்தது. ஆனால் காணிகளை பகிர்ந்தளிப்பது என்பது முதலமைச்சரின் ஒப்புதல் இன்றி நிறைவேற்றப்பட முடியாது என்பது இருக்கக்கூடிய சட்டம்”என தெரிவித்தார்.
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க.......
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

