விக்னேஸ்வரன் மீதுள்ள பயத்தில் மாகாணசபை தேர்தலை தடுத்தவர் சுமந்திரனே!
மாகாணசபைகள் இன்று மூன்றரை வருடங்களாக அழிந்துபோய் இருப்பதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்புதான் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
வடமாகாண முதலமைச்சராகவிருந்த சி..வி.விக்னேஸ்வரன் மீண்டும் முதலமைச்சராக வரக்கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட செயற்பாடே இதுவரையில் மாகாணசபை தேர்தல் நடைபெறாததற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.
மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
எனது முதலாவது நாடாளுமன்ற உரையின்போது அதிகார பகிர்வு விடயத்தில் மாகாணசபை முறைமை மட்டுமே எமது கைகளில் உள்ளது, அதனைப் பலப்படுத்தியெடுக்க வேண்டும் என்று கோரியிருந்தேன். 2017ஆம் ஆண்டு மாகாணசபை முறைமையில் வந்த சட்டத்தை சரியாக நடத்தியிருக்க வேண்டும். நல்லாட்சி அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இழைத்த தவறு தான் மாகாணசபை தேர்தல் தாமதமடைந்ததற்குக் காரணமாகும்.
ஐம்பதிற்கு ஐம்பது, வட்டாரமுறை என்றெல்லாம் கொண்டுவந்து குழப்பியடித்து எல்லாவற்றையும் குழப்பிவிட்டனர். வடக்கில் விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்தபோது மீண்டும் அவர் போட்டியிட்டு முதலமைச்சராக வந்துவிடுவார் என்ற பயத்தில் சுமந்திரன் மாகாணசபைத் தேர்தலை தடுத்திருந்தார். சட்டமூலம் வந்தபோது கூட தமிழில் அதனை சமர்ப்பிக்கவில்லை என்று கூறியவர் சுமந்திரனே.
ஆகக்கூடுதலாக ஆங்கில மொழியை பயன்படுத்துபவரும் சுமந்திரன் தான். ஆகையால் அவரது உள்ளக அரசியல் காரணமாக அவர் முடிவெடுக்கக்கூடிய ஆட்சியில் இருந்தபோது கூட மாகாணசபை முறைமை மூன்று வருடங்களாக அழிந்துபோய் கிடப்பதற்கு பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும். ஆனால் தற்போதிருக்கின்ற அரசாங்கம் வந்ததிலிருந்து தேர்தலை நடத்தவேண்டுமென்ற முன்மொழிவை வைத்துக்கொண்டேயிருந்தது.
அது சாத்தியமாகக்கூடிய சூழல் உருவாகியிருக்கின்றது. அடுத்தவருடம் மூன்றாம் மாதமளவில் தேர்தல் அறிவிப்பை அரசாங்கம் செய்திருக்கின்றது. கிழக்கு மாகாணம் தனித்துவமான மாகாணமாகும். கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் தங்கள் தலைமையை தீர்மானிக்கின்ற தேர்தலாக அதை நாங்கள் பார்க்க வேண்டும். அந்தத் தேர்தலில் நல்லதொரு முதலமைச்சரை மக்கள் தேர்வு செய்து இந்த மாகாணத்தை கட்டியெழுப்ப அவருடன் இணைந்து உழைக்க வேண்டும்.
அதிகார விடயத்திலும் மாகாணசபை முறைமையிலிருந்து தான் ஆரம்பிக்க முடியுமென்று நாங்கள் 2007ஆம் ஆண்டிலிருந்தே சொல்லி வந்திருக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கள் கொள்கையின் பிரகாரமும் அவர்களின் பிழைகளை ஏற்றுக்கொண்டும் யதார்த்தத்தை உணர்ந்து மாகாணசபை முறைமையில் இறங்கியிருப்பதும் நேற்று அவர்கள் மாகாணசபை தேர்தலுக்கான போட்டியாளர்களை பேசி தீர்மானித்திருக்கின்ற செய்திகளை அறிந்து நான் மனதிற்குள் சிரித்துக்கொண்டேன்.
2008ஆம் ஆண்டு தேர்தலில் எங்களால் போட்டியிட முடியாது எனவும் வடக்கு கிழக்கு இணையாத மாகாணத்தில் போட்டியிட முடியாதென்று பேசியவர்கள் இன்று தேர்தல் அறிவிப்பு வந்தவுடனேயே போட்டியாளர்களை தெரிவு செய்து களத்தில் குதித்திருக்கின்ற நிலைமையை பார்த்து நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
எதிர்காலத்தில் சிறந்த ஒரு முதலமைச்சரை வடக்கு கிழக்கு பெற்று சிறப்பான அதிகாரத்தை நோக்கிய கிழக்கு மாகாணசபையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் பங்கெடுக்கும் எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் பிரதமரின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படும் உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் என்னும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிக்கு கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் வீடமைப்பு திட்டத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு முதல்கட்ட நிதிவழங்கும் நடவடிக்கை இன்று நடைபெற்றது.
தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஊடாக தெரிவுசெய்யப்பட்ட 33பேருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா நிதி இதன்போது வழங்கிவைக்கப்பட்டது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன், தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மாவட்ட சிரேஸ்ட முகாமையாளர் கே.ஜெகநாதன்,உதவி பிரதேச செயலாளர், உட்பட பலர் கலந்துகொண்டனர்.



