இன்றும் நாளையும் பொது சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பு
நாடளாவிய ரீதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இன்று (30) மற்றும் நாளைய தினம் (31) அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அந்த சங்கத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
களப்பணிகளுக்கு செல்லும்போது தமது வாகனங்களுக்கு வழங்கப்படுகின்ற எரிபொருளின் அளவை அதிகரித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
பணிப்புறக்கணிப்பினால் பாதிக்கப்படாது
எவ்வாறாயினும், இரத்த வங்கி, மகப்பேற்று மருத்துவமனைகள், சிறுவர் மருத்துவமனைகள், சிறுநீரகப் பிரிவுகள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் போன்றவை பணிப்புறக்கணிப்பினால் பாதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரச மற்றும் மாகாண அரச சேவையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் தமது மதிய நேர உணவு இடைவேளையின்போது கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.