அச்சத்தில் புடினுக்கு தவறான தகவல்களை அளிக்கும் ஆலோசகர்கள் -அமெரிக்கா வெளியிட்ட தகவல்
ரஷ்ய அதிபர் புடின் அவரது நாட்டு இராணுவத்தினரால் தவறாக வழிநடத்தப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை செயலாளர் கேட் பெடிங்பீல்ட் தெரிவிக்கையில்,
ரஷ்ய அதிபர் புடின், அவரது இராணுவத்தால் தவறாக வழிநடத்தப்பட்டதாக உணர்ந்துள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இது உக்ரைன் போருக்கிடையில் புடினுக்கும், அவரது இராணுவ தலைமைக்கும் தொடர்ந்து பதற்றமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனில் ரஷ்ய இராணுவம் எவ்வளவு மோசமாக செயல்படுகிறது மற்றும் பொருளாதார தடைகளால் ரஷ்யா எப்படி முடங்கி கிடக்கிறது என்பது பற்றி புடினிடம் தவறான தகவல்கள் சொல்லப்படுகிறது என்று நாங்கள் நம்புகிறோம்.
ஏனென்றால் புடினின் மூத்த ஆலோசகர்கள் அவரிடம் உண்மையை சொல்ல பயப்படுகிறார்கள். புடின் தொடங்கிய போர் தவறானது என்பது தெளிவாகி இருக்கிறது. இது ரஷ்யாவை நீண்ட காலத்துக்கு பலவீனப்படுத்தும்.
மேலும் உலக அரங்கில் இருந்து தனிமைப்படுத்துவது அதிகரிக்கும் என்றார்.
மேலும் தன்னிடம் தவறான தகவல்களை கூறியதால் புடின் ஆத்திரத்தில் இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
