உக்ரைனுக்கு ஏவுகணைகளை வழங்கினால் --மிரட்டுகிறார் புடின்
புடின் விடுத்துள்ள எச்சரிக்கை
உக்ரைனுக்கு தொலை தூர இலக்கை தாக்கும் ஏவுகணைகளை அமெரிக்கா வழங்கினால், புதிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என மேற்கு நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புடின் (Vladimir Putin )எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் 100 நாட்களை கடந்துள்ள நிலையில், நீண்ட தூர இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை வழங்குமாறு அமெரிக்காவிடம் உக்ரைன் கோரியுள்ளது.
உக்ரைன் தற்போது வைத்திருக்கும் பீரங்கிகளை விட, 70 கிமீ (45 மைல்) தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய துல்லியமான வழிகாட்டுதல் கொண்ட ரொக்கெட்டுகளை ஏவக்கூடிய M142 ஹை மொபிலிட்டி ஆர்ட்டிலரி ரொக்கெட் சிஸ்டத்தை (HIMARS) அனுப்புவதாக அமெரிக்கா அறிவித்தது.
ரொக்கெட்டுகள் ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளைத் தாக்கப் பயன்படுத்தப்பட மாட்டாது என்று அரச தலைவர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் உறுதிமொழியைப் பெற்ற பின்னரே தாங்கள் வழங்க ஒப்புக்கொண்டதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த தொகுப்பில் ஹெலிகொப்டர்கள், தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், தந்திரோபாய வாகனங்கள் மற்றும் உதிரிப் பாகங்களும் அடங்கும்.
அமெரிக்கா மற்றும் ஜேர்மனியின் அறிவிப்பு
இதேவேளை ரஷ்யாவின் வான் தாக்குதல்களில் இருந்து ஒரு முழு நகரத்தையும் பாதுகாக்க உக்ரைனுக்கு உதவும் வகையில் ஜேர்மனி தனது அதி நவீன வான் பாதுகாப்பு அமைப்பை - ஐரிஸ்-டி-யை அனுப்புவதாக உறுதியளித்தது.
இந்நிலையில், இது குறித்து பேசிய புடின்(Vladimir Putin ), அந்த ரக ஏவுகணைகள் வழங்கப்பட்டால், தாங்கள் இதுவரை தாக்காத இலக்குகளை தாக்குவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனினும் அந்த இலக்குகள் தொடர்பான விவரங்களை அவர் வெளியிடவில்லை.
