புடின் ஒரு போர்க் குற்றவாளி; அவர் அதிகாரத்தில் நீடிக்கக் கூடாது - ஜோ பைடன் பகிரங்கம்!
ரஷ்ய அதிபர் புடின் ஒரு போர்க் குற்றவாளி, அவர் பலரை இறக்கமின்றி கொல்பவர், கடவுளின் பொருட்டு அவர் அதிகாரத்தில் நீடிக்கக் கூடாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா இன்று 32 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதற்கு தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால், உக்ரைன் - ரஷ்ய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதற்கிடையில், உக்ரைனின் அண்டை நாடான போலாந்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று பயணம் மேற்கொண்டுள்ளார். நேட்டோ நாடான போலாந்துக்கு சென்றுள்ள ஜோ பைடன் அமெரிக்க வீரர்கள் மற்றும் நேட்டோ படையில் உள்ள வீரர்கள் மத்தியில் பேசினார்.
அதேபோல், போலாந்துக்கு வந்துள்ள உக்ரைன் மந்திரிகளுடனும் ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் உக்ரைனில் இருந்து அகதிகளாக போலாந்தில் தஞ்சமடைந்துள்ள மக்களை ஜோ பைடன் சந்தித்துப் பேசியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நேட்டோ, அமெரிக்க படையினர் மற்றும் அதிகாரிகள் மத்தியில் ஜோ பைடன் பேசினார். அதன்போது, உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்த போரின் திட்டம் தோல்வியடைந்துள்ளது.
நேட்டோ அமைப்பில் பிளவை ஏற்படுத்த விளாடிமிர் புடின் முயற்சிக்கிறார். ஆனால், அவரால் அது முடியவில்லை. நாம் அனைவரும் ஒன்றாக உறுதுணையாக உள்ளோம் என மேலும் தெரிவித்துள்ளார்.