உலகக் கிண்ண கால்பந்தாட்ட அரையிறுதி ஆட்டத்தில் நடுவரால் வழங்கப்பட்ட தீர்ப்பு தவறு; குரோஷியா அணித்தலைவர் லூகா மாட்ரிச்!
கத்தார் உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இறுதிப்போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதவுள்ளன.
இந்த நிலையில் இதற்கு முன் நடந்த அர்ஜென்டினா மற்றும் குரோசியா அணிகளுக்கிடையிலான அரையிறுதி ஆட்டத்தில் நடுவரால் வழங்கப்பட்ட தீர்ப்புக் குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நடுவர் டேனியல் ஒர்சாடோவின் தீர்ப்பு குறித்து குரோஷிய அணியின் தலைவர் லூகா மாட்ரிச் குற்றம் சாட்டியுள்ளார்.
லூகா மாட்ரிச்சின் குற்றச்சாட்டு
பிபா உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் குரோசியா அணிகள் மோதியிருந்தன.
குறித்த போட்டியில் அர்ஜென்டினா அணி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தநிலையில், அர்ஜென்டினா அணியால் அடிக்கப்பட்ட முதலாவது கோல் தொடர்பிலேயே நடுவர் மீது குறித்த விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அர்ஜென்டினா அணியின் முதலாவது கோலுக்கு காரணம் நடுவர் டேனியல் ஒர்சாடோ வழங்கிய தவறான தண்ட உதையே என குரோஷிய அணியின் தலைவர் லூகா மாட்ரிச் குற்றம் சாட்டியுள்ளார்.
நடுவர் டேனியல் ஒர்சாடோவின் தீர்ப்புகள்
மேலும் அவர், பொதுவாக நான் நடந்து முடிந்த போட்டிகளை பற்றியோ அல்லது நடுவர்களை பற்றியோ விமர்சிப்பதில்லை, இருந்தாலும் இத்தாலிய நடுவர் டேனியல் ஒர்சாடோவின் தீர்ப்புகள் குறித்து நான் பேச வேண்டும் என கூறியுள்ளார்.
நடுவர் டேனியல் ஒர்சாடோ இந்த போட்டியில் மட்டுமல்ல நாங்கள் விளையாடிய ஏராளமான போட்டிகளின் போதும் இதைத்தான் செய்திருக்கின்றார் என மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை, அர்ஜென்டினா அணிக்கு தனது வாழ்த்துக்களையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்

