தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்த கடற்றொழில் அமைச்சருக்கு அனுமதி மறுப்பு : எழுந்துள்ள கண்டனம்
தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியில் அஞ்சலி செலுத்துவதற்கு சென்ற கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar), தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் திருப்பி அனுப்பப்பட்டமை தொடர்பாக அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தம்பிராஜா கண்டனம் வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் - நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நடைபெற்று வருகின்ற தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்கு கடந்த 17ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்த சென்ற போது அங்கிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அஞ்சலி செலுத்த அனுமதிக்க மாட்டோம் என தடுத்து நிறுத்தியிருந்தனர்.
இந்தநிலையில் இது குறித்து யாழ் ஊடக அமையத்தில் நேற்று (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே தம்பிராஜா இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளார்.
முட்டாள்தனமான செயற்பாடு
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் தமிழர் தேசத்திற்காக எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தங்களுடைய இன்னுயிரை அர்ப்பணித்த அனைத்து போராளிகளுக்கும் திலீபனின் நினைவு தினத்தோடு அந்தக் கவலைகளையும் எமது இனம் பரிமாறிக் கொண்டிருக்கின்றது.
இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் இனமான உணர்வுகளை, போராளிகளின் தூய்மையான போராட்டத்தை அனைத்து மக்களின் ஊடாக அறிந்து கொண்டு தன்னை மறந்த சூழ்நிலையில் அமைச்சர் சந்திரசேகர், திலீபன் போன்ற தமிழ் தேசிய இனத்தின் உயர்ந்த நோக்கத்திற்காக தமிழ் மக்களுக்காக தன்னுயிரை ஆகுதியாக்கியவரின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த சென்ற வேளை அரசியலை ஆளுமையை சரியாக ஆராயாது முட்டாள்தனமாக செயற்பட்டுள்ளனர்.
சந்தர்ப்பத்தை வீணடித்துவிட்டனர்
தமிழர் தேச போராட்டத்திற்கு அங்கீகாரமளிக்க வந்திருந்த அமைச்சரவை அமைச்சரை அவமதித்து திருப்பியனுப்பியதை அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது.
நல்லூரில் திலீபனின் நினைவுச் சிலையை வடமாகாணம் முழுவதும் பார்க்கின்ற அளவிற்கு நிறுவ வேண்டிய அந்தச் சந்தர்ப்பத்தை அரசியல் தெரியாத சில சின்னஞ்சிறுவர்கள் அங்கே அமைச்சரை அவமதித்து நாசமாக்கி விட்டார்கள்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
