கடலுக்கடியில் புதைக்கப்படும் தமிழர் பிரச்சினை? எதிர்பார்ப்புகளும் பொய்த்துப் போயின!!
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நேற்று வெளியிட்ட தனது கொள்கைப்பிரகடன உரையில் இனப்பிரச்சினையை பற்றி ஒரு வார்த்தையும் கூறாமல், கடலுக்கடியில் அமைக்கத் திட்டமிடும் டிஜிட்டல் தொழில்நுட்ப கேபிள்களை பற்றி அதிகம் பேசினார்.
அவ்வேளை தன்னுடன் உரையாடிய முன்னாள் பிரதமரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க “உங்கள் இனப்பிரச்சினையையும் கடலுக்கு அடியில் தான் புதைக்கப் போகிறாரோ?” என கேலியாக தெரிவித்தார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan) கூறியுள்ளார்.
அரச தலைவரின் கொள்கைப்பிரகடன (சிம்மாசன) உரை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மனோ கணேசன் மேலும் தெரிவிக்கையில்,
''அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ அடுத்த மூன்று வருடங்களுக்கான தனது அரசாங்கத்தின் கொள்கைநோக்கை விளக்கி நேற்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய நீண்ட உரையில், தேசிய இனப்பிரச்சினையை, பொருளாதார பிரச்சினையாக மட்டுமே பார்க்கும் தனது கொள்கை மாறவில்லை என்பதை தெளிவாக கோடிட்டு காட்டினார்.
அரச தலைவரின் உரை நிறைவு பெற்ற பின், முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் மிகவும் சலிப்புடனும், ஏமாற்றத்துடனும் இருந்ததை, அவருக்கு அருகில் அமர்ந்திருந்த நான் அவருடன் சற்று உரையாடிய போது அவதானித்தேன். அது எனக்கு மிகுந்த மனக்கவலையை தந்தது.
"அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை நடத்த தான் தயார்" என்ற ஒரு நிலைப்பாட்டை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தனது கொள்கைப்பிரகடன உரையில் அறிவிப்பார் என்று கடந்த சில நாட்களாக ஒருசில ஆங்கில, தமிழ், சிங்கள ஊடகங்களிலும், ஒருசில தமிழ் அரசியல் தரப்புகளாலும் வெளியிடப்பட்ட ஊகங்கள் இன்று பொய்த்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.