சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால் மலையக மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி! இராதாகிருஷ்ணன் எம்.பி சுட்டிக்காட்டு
சஜித் பிரேமதாச (Sajith Premadasa) ஜனாதிபதியானால் மலையக மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும் என நுவரெலியா (Nuwara Eliya) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் (Velusami Radhakrishnan) தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த மக்கள் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “அழிவை நோக்கி செல்கின்றவர்களுக்கு முதலில் ஏற்படுவது புத்திசுவாதீனமாகும். அவ்வாறான செயல்பாடே இன்று நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
சஜித் பிரேமதாச
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பிரிந்து சென்ற ஒரு சிலர் நான் கட்சி தாவப்போவதாகவும், அதற்கான திகதியையும் குறிப்பிடுகிறார்கள். இது புத்திசுவாதீனம் இல்லாதவர்கள் அழிவை நோக்கி செல்கின்ற ஒரு பயணத்தின் கட்டமாகும்.
நாம் எந்த காரணம் கொண்டும் கட்சி மாறுவதற்கோ விலை போவதற்கும் தயாராக இல்லை. நாம் என்றும் சஜித் பிரேமதாசவுடன் பயணிப்போம். 2019ம் ஆண்டு ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஆரம்பிப்பதற்கு மலையக மக்கள் முன்னணியும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் முன்நின்று செயற்பட்டது.
இதனால் தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து யாரோ ஒருத்தர் பணத்திற்காக விலை போனதால், நானும் அவ்வாறு கட்சியிலிருந்து வெளியேறி செல்வேன் என சொல்வது கேலி கூத்தான விடயமாகும்.
மலையக மக்கள்
அவர் சொன்ன விடயம் முற்றிலும் தவறான ஒரு கருத்தாகும். அவர் விருப்பத்திற்கு எதை கூறினாலும் அது நடக்காது. எங்களுக்கு அப்படி அவரை போல் கட்சி தாவும் அவசியம் இல்லை. தற்போதைய ஆய்வுகளின் படி சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார்.
அடுத்தது அனுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இருக்கின்றார். ஆனால் ரணில் விக்கிரமசிங்க பட்டியலிலேயே இல்லை. எனவே, மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
சஜித் பிரேமதாச மலையக மக்கள் தொடர்பில் அதிகமான கரிசனை காட்டி வருகின்றார். அவர் நாடாளுமன்றத்தில் மலையக மக்கள் எதிர்கொள்ளும் சம்பள பிரச்சினை, வீடு பிரச்சினை, காணி பிரச்சினை, பொருளாதார பிரச்சினை, சுகாதார பிரச்சினை போன்ற விடயங்களை முன்கொண்டு வந்துள்ளார்.
எனவே, சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால் மலையக மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும்” என்றார்.