இளம் மருத்துவரின் உயிரை பறித்த ராஜகிரிய மேம்பாலம்
மின் கம்பத்தில் மோதி விபத்து
ராஜகிரிய மேம்பாலத்திற்கு அருகில் நேற்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் கோட்டை வீதி மகளிர் வைத்தியசாலையில் கடமையாற்றும் இளம் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த வைத்தியர் காசல் வைத்தியசாலைக்கு பணிக்காக சென்று கொண்டிருந்தவேளை பத்தரமுல்லையில் இருந்து பொரளை நோக்கி பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ராஜகிரிய மேம்பாலத்தின் அடிவாரத்தில் கார் வீதியை விட்டு விலகி நடைபாதையில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக வெலிக்கடை காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேம்பாலத்தின் முனைப்பகுதி படு மோசம்
காலி கராப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த கல்ஹார கொலம்பகே என்ற இளம் வைத்தியரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
பிரதான வீதியுடன் இணைக்கும் மேம்பாலத்தின் முனைப்பகுதி குண்டும் குழியுமாக காணப்படுவதனால் அவ்விடத்தில் இவ்வாறான பல விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பிரச்னைகளைப் புரிந்துகொள்ளாமல் மேம்பாலத்தில் செல்லும் வாகனங்கள், பாலத்தின் முடிவில் அதிவேகமாகச் செல்லும்போது இதுபோன்ற விபத்துகளுக்கு ஆளாக நேரிடுகிறது.
இது குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை எனவும், வேகத்தை குறைத்து தாழ்வான பாலத்தில் வாகனம் ஓட்ட வேண்டும் என்ற எச்சரிக்கை அறிவிப்பு கூட இல்லை எனவும் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.