ராஜாங்கணே தேரருக்கு எதிராக நீதிமன்றம் விடுத்த உத்தரவு: சிஐடிக்கும் பணிப்புரை!
ராஜாங்கணே சத்தரத்தன தேரருக்கு உளவியல் பரிசோதனை மேற்கொள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, தேரரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உளவியல் பரிசோதனைக்கு உட்படுத்தி, அதற்கான அறிக்கையை குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் நேற்று (ஜூலை 9) தெரிவித்துள்ளது.
கைது நடவடிக்கை
மேலும், தேரர் இயக்கும் யூடியூப் சனலில் வெளியிடப்பட்ட காணொளிகளில் ஆபாச வார்த்தைகள் உள்ளதா என்பதை பரிசோதித்து, அதற்கான அறிக்கையும் CID சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சத்தரத்தன தேரர் தற்போது ஆபாச வார்த்தைகள் பயன்படுத்தக் கூடாதது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் பிணையில் உள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், மத சகவாழ்வுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் பௌத்தத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் அனுப்பப்பட்டார்.
தேரருக்கு எதிராக நடவடிக்கை
இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம், இலங்கை ரமண்ண மகா நிகாயத்தின் கரக சபை, தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து அவரை பிக்குச் சங்கத்திலிருந்து வெளியேற்றும் முடிவை எடுத்தது.
இது, தேரர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட பல சர்ச்சையான கருத்துகளுக்குப் பின்னர் எடுக்கப்பட்ட முடிவாகக் கூறப்படுகிறது.
அவரின் கருத்துகள் பெரும் அளவில் கவனம் பெற்றதுடன், அரசியல் மற்றும் சமுதாய விவாதத்தையும் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
