நெருக்கடி நிலைக்குள் ராஜபக்ச அரசாங்கம் - கடனை மீள் செலுத்துவதிலும் சிக்கல்
ராஜபக்ச அரசாங்கம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“எடுக்கப்பட்ட தவறான தீர்மானங்கள் காரணமாக பெறப்பட்ட கடன் தொகைகளை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு ராஜபக்ஷ அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.
இந்த வருடம் 6.7 பில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளதாக நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை அவதானிக்க வேண்டிய விடயம்.
இதேவேளை இந்த மாதம் மாத்திரம் 1.3 பில்லியன் டொலர் செலுத்த வேண்டியுள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரச்சனை என்னவென்றால், கடனைச் செலுத்துவதற்கு அரசாங்கத்திடம் வேலைத்திட்டம் ஒன்று இல்லை. கடனை திருப்பிச் செலுத்தும் வேலைத்திட்டத்தின் பிரகாரம் சர்வதேச மட்டத்தில் நம்பிக்கையைக் கட்டியேழுப்ப முடியும்.
நாட்டில் அத்தியவசியப் பொருட்களை இல்லாமல் செய்துவிட்டு, ஒரு சிலர் மட்டும் நன்மை அடையும் வேலைத்திட்டத்தை ராஜபக்ஷ அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது” எனக் கூறியுள்ளார்.