நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய ராஜபக்சக்கள்: மகிந்த அளித்த விளக்கம்
இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்களும் அவரது சகாக்களும் காரணமென நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், அதனை நிராகரிக்கும் வகையிலான அறிக்கையொன்றை சிறிலங்காவின் முன்னாள் அதிபரும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளார்
இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமைக்கு வெளிக்காரணங்கள் எதுவும் இல்லை எனவும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதம் குறைவடைந்தமையே அதற்கான முக்கிய காரணி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் குறித்து அண்மை நாட்களில் பெருமளவில் பேசப்படுவதாக மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
கொரோனா தொற்று
இந்த பின்னணியில், யுத்தத்துக்கு முன்னர் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 6 வீதமாக இருந்ததாகவும் யுத்தத்தின் பின்னரான தமது ஆட்சிகாலத்தின் போது அது 6.8 வீதமாக அதிகரித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, 2010 முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தி மூவாயிரத்து 819 அமெரிக்க டொலர்களால் அதிகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி மூவாயிரத்து 474 அமெரிக்க டொலர்களாக குறைவடைந்திருந்ததாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம் கடந்த 2015 ஆம் ஆண்டு பாரிய வளர்ச்சியடைந்திருந்ததை உறுதிப்படுத்தும் சான்றுகள் இருந்ததாகவும், தாம் அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, பொருளாதார வளர்ச்சி 4.2 வீதமாக குறைவடைந்திருந்ததாகவும் அவர் நினைவூட்டியுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
இதனை தொடர்ந்து, இலங்கையின் வெளிநாட்டு கடன் 28 வீதத்தால் அதிகரித்திருந்ததாகவும் இதற்கமைய மொத்த வெளிநாட்டு கடன் 54 ஆயிரத்து 811 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு தாம் பிரதமராக பதவியேற்ற போது, பொருளாதாரம் ஏற்கனவே பாரிய பின்னடைவை எதிர்நோக்கியிருந்ததாகவும், இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக அந்த நிலை மேலும் மோசமடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், சரியான தரவுகள் மற்றும் உண்மைகளின் அடிப்படையில், மக்கள் தங்கள் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவை பொய் பிரச்சாரங்களை அடிப்படையாக கொண்டிருக்க கூடாதெனவும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
இந்தநிலையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்களும் அவரது சகாக்களும் காரணமென நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் இதுவரை கோட்டாபய ராஜபக்ச மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் எந்தவொரு கருத்தையும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |